

சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத் தவரின் பெயரை தெரிவிக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.
நிலக்கரி சுரங்க உரிமம், 2ஜி அலைக்கற்றை ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டில் பல முறை சந்தித் தாகக் கூறி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ரஞ்சித் சின்ஹா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டதாவது:
சிபிஐ இயக்குநரின் வீட்டு வரவேற்பறை டைரி என்று கூறி, மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் உண்மைத் தன்மை மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதில் 10 சதவீத பதிவுகள் உண்மையாக இருக்கலாம். மீதி 90 சதவீதம் போலியானவை. இந்த டைரியை கடந்த 7-ம் தேதி இரவு 10 மணிக்கு ஒருவர் கொண்டு வந்து கொடுத்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த ஆவணத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பே, டைரியில் உள்ள விவரங்களை மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை வெளியிடுகிறது. ‘அந்த டைரியை மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்யப் போகிறார்’ என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிடுகிறது.
பிரசாந்த் பூஷண் மனதில் நினைத்ததை எப்படி அந்த பத்திரிகையால் வெளியிட முடிகிறது. இந்த வழக்கை யாரோ பின்புலத்தில் இருந்து இயக்கி வருகின்றனர். டைரியை கொடுத்தது யார் என்பதை வெளியிட வேண்டும் என விகாஸ் சிங் வாதிட்டார்.
பிரசாந்த் பூஷண் வாதிடும் போது, “இந்த டைரியை யார் கொடுத்தது என்பது முக்கியமல்ல. இதன் உண்மைத்தன்மையை நீதிமன்றம் நியமிக்கும் குழுவால் சரிபார்க்க 10 நிமிடம் போதும். குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்தாரா? அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது தான் முக்கியம்” என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனு விவரங்கள், ஆவணங்களை பதிவாளர் அலுவலகம் ரகசியமாகவும், பாது காப்பாகவும் வைக்க வேண்டும். பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதி மன்ற நடைமுறைகளின்படி இல்லாத தால், புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. மேலும், சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத் தவர் பற்றிய விவரத்தை பிரசாந்த் பூஷண நீதிமன்றத்துக்கு மூடிய உறையில் தெரிவிக்க வேண்டும்.