Last Updated : 25 May, 2019 04:19 PM

 

Published : 25 May 2019 04:19 PM
Last Updated : 25 May 2019 04:19 PM

அமேதியில் ராகுல் காந்தி தோற்கக் காரணம் என்ன? 39 ஆண்டுகள் பாரம்பரியத் தொகுதியை இழந்தது எப்படி?

நேரு குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதி என்ற பெருமை உ.பி.யில் உள்ள அமேதி தொகுதிக்கு உண்டு. கடந்த 39 ஆண்டுகளாக அந்தத் தொகுதியில் நேரு குடும்பத்தில் உள்ளவர்களைத் தவிர வேறு ஒருவரையும் அங்கிருக்கும் மக்கள் வெற்றி பெற வைத்ததில்லை.

அப்படி இருக்கையில் ராகுல் காந்தியை ஏன் மக்கள் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியிடம்  இந்த முறை தோற்கவைத்தார்கள்?

39 ஆண்டுகளாக இல்லாத வெறுப்பு திடீரென ராகுல் காந்தி மீது அமேதி மக்களுக்கு வரக் காரணம் என்ன? என்ன செய்ய மறந்தார்?

அதற்கு முன் தொகுதி குறித்த சில விஷயங்களையும், சில புள்ளிவிவரங்களையும் பார்க்கலாம்.

கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. இத்தொகுதியில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர பெரும்பாலும் வேறு யாரும் போட்டியிட்டு வென்றதில்லை.

1980-ம் ஆண்டில் நடந்த தேர்தலில்  சஞ்சய் காந்தி வென்றார். அதன்பின் 1981 முதல் 1991-ம் ஆண்டுவரை ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்றார்.

அவர் மறைவுக்குப் பின், அவர்களின் குடும்ப நண்பர் சதீஸ் சர்மா 1991 முதல் 1998-ம் ஆண்டுவரை போட்டியிட்டு வென்றார். அதன்பின் 1999-ம் ஆண்டு மட்டும் பாஜக வேட்பாளர் சஞ்சய் சிங் வென்றார். அவர் ஒரு வருடம் மட்டுமே பதவியில் இருந்தார்.

மீண்டும் 1999-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். அதன்பின் 2004-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை ராகுல் காந்தி தான் இத்தொகுதியில் எம்.பி.யாக இருந்துவந்தார்.

ஆனால், 2019-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் இது தலைகீழானது. பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

வாக்கு சதவீதம்

கடந்த 2014-ம் ஆண்டில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 2019-ம் ஆண்டில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிட்டால் ராகுல் காந்தி பெற்ற வாக்கு வித்தியாசத்தின் அளவு 2.81 சதவீதம் மட்டுமே குறைந்திருந்தது. இந்த முறை ராகுல் காந்தி 43.90 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தார் .

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டில் ஸ்மிருதி இரானி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் இந்த முறை 15.32 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்த வாக்குகளில் 49.70 சதவீத வாக்குகளை ஸ்மிருதி பெற்றுள்ளார். ராகுலுக்கும் , ஸ்மிருதிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 5.86 சதவீதம் மட்டுமே.

இந்த 5.86 சதவீத வாக்குகள்தான் 39 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத் தொகுதியை இழக்க வைத்திருக்கிறது.

தோல்விக்கு என்ன காரணம்?

ராகுல் காந்தியின் தோல்விக்கு இங்குள்ள மக்கள் கூறும் முக்கியக் காரணமே தொகுதிக்கு வராத, மக்களை அடிக்கடி சந்திக்காத தலைவருக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்கள்.

அமேதியில் உள்ள புராலியா நகருக்கு ராகுல் காந்தி சென்று ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. அமேதியில் உள்ள முக்கிய நகரங்கள் பலவற்றுக்கே ராகுல் காந்தி செல்லாத நிலையில், கிராமங்களின் நிலைமை மிக மோசம். தங்கள் தொகுதியின் எம்.பி. யார் என்று கேட்கும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

புராலியா நகரைச் சேர்ந்த சுரேந்திர சிங் கூறுகையில், " எங்கள் தொகுதிக்கு வராத ஒரு தலைவருக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? எங்கள் நகருக்கு ராகுல் வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தேர்தல் நேரத்தில்கூட வாக்கு கேட்க வருவார் என்று எதிர்பார்த்தோம். அப்போதுகூட ராகுல் காந்தி வரவில்லை. ஆனால், ஸ்மிருதி அப்படியல்ல, வாக்குப்பதிவு நடந்த அன்றுகூட ஸ்மிருதி வந்திருந்தார்" என்று தெரிவித்தார்.

தன்னை 3 முறை எம்.பி.யாக்கி அழகு பார்த்த மக்களை அடிக்கடி சந்திக்காமல் ராகுல் காந்தி இருந்து வந்ததுதான் மக்களின் கோபத்துக்குக் காரணமாகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த முறை ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் இருவரும் அமேதி தொகுதியின் பல இடங்களுக்குச் செல்லவில்லை. மக்களைச் சந்திக்கவில்லை. உள்ளூர் தலைவர்கள் மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்தால் வெற்றி எவ்வாறு கிடைக்கும். உள்ளூர் தலைவருக்காகவா வாக்களித்தோம்  என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

உள்ளூர் காங்கிரஸ் தலைவரான ராகேஷ் சிங் கூறுகையில், "பாஜகவோடு ஒப்பிடும்போது, அமேதியில் அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சி வலுவிழந்துவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 4 தொகுதிகளை பாஜகவிடமும், சமாஜ்வாதியிடமும் இழந்துவிட்டோம். பிறகு எங்கு அமைப்புரீதியாக வலுவாக இருக்க முடியும்?

பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் பம்பரம் போல் சுழன்று அமேதி தொகுதியில் பணியாற்றி, காங்கிரஸ் வாக்குகளை கபளீகரம் செய்துகொண்டார்கள்.

அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கடந்த சில ஆண்டுகளாக பாஜக பக்கம் சேர்ந்துவிட்டார்கள். இது கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிட்டது. இது பாஜகவுக்குச் சாதகமாகி இன்னும் தங்களை வலுப்படுத்த வாய்ப்பாகிவிட்டது.

அமேதியில் தலித் மற்றும் ஓபிசி வாக்குகள் 58 சதவீதம் உள்ளன. இதுதவிர தாக்கூர், பிராமணர்கள் வாக்குகள் 26 சதவீதமும், முஸ்லிம்கள் வாக்கு 16 சதவீதமும் உள்ளன. இவற்றில் முஸ்லிம் வாக்குகள் கூட காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாறிவிட்டது" எனத் தெரிவித்தார்.

முஷாபிர்கானா தொகுதியைச் சேர்ந்த பர்மான் ஹெய்தர் கூறுகையில், "ராகுல் காந்தி அமேதி தொகுதிக்குள் வந்துவிட்டால், அவரைச் சுற்றி உள்ளூர் தலைவர்கள் கூட்டம் சுற்றிக்கொள்கிறது. அவர்கள் மக்களைச் சந்திக்க ராகுலை அனுமதிக்க மறுக்கிறார்கள். அமேதி தொகுதி எம்.பி. தங்களின் மக்களைச் சந்தித்து குறைகேட்டால்தானே மக்களிடையே அவருக்கு நட்பு ஏற்படும். ஆனால், அதற்கு வாய்ப்பே அளிக்கவில்லை. ராகுலின் தோல்விக்கு உள்ளூர் தலைவர்களே காரணமாகிவிட்டார்கள்.

ஆனால், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி அப்படியல்ல. கடந்த 2014-ம் ஆண்டில் தோற்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை அமேதி தொகுதிக்கு வந்துள்ளார். இளைஞர்களுக்குத் தேவையான பல்வேறு கல்வி நலத்திட்டங்களைச் செய்துள்ளார்.

பல்வேறு கல்வி மையங்களைத் திறந்து மாணவர்களுக்கு  உதவி இரானி, மக்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார். அமேதி தொகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு ஸ்மிருதி அடிக்கடி வந்தார். மக்களுடன் உரையாடினார். அவர்களின் தேவை என்ன, தொகுதிக்கும், ஒவ்வொரு கிராமத்துக்கும் என்ன தேவை என்பதை அறிந்தார்.

அமேதி தொகுதி மக்கள் டெல்லிக்குச் சென்று ஸ்மிருதியைச் சந்தித்தால்கூட அவர்களின்  பெயரை நினைவில் வைத்திருந்தார். ஆனால் ராகுல் கடந்த 5 ஆண்டுகளில் 15 முறைகூட தொகுதிக்கு வந்திருக்க மாட்டார். மக்களுடன் பேசுவதில்லை, பழகுவதும் இல்லை "என ஆதங்கத்தை தெரிவித்தார்.

இவற்றைத் தவிர காங்கிரஸ் கட்சி அமேதி தொகுதியில் அமைப்பு ரீதியான கட்டமைப்பை இழந்துவிட்டது. மக்களிடையே தங்களுக்குரிய நட்புறவை இழந்துவிட்டது. குறிப்பாக கிராமப்புற மக்களோடு நெருங்கி தொடர்பை இழந்தது காங்கிரஸ் கட்சி வீழ்ச்சிக்கும், ராகுலின் தோல்விக்கும் காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அமேதி தொகுதியில் இருக்கும் 5 சட்டப்பேரவை தொகுதிகளை காங்கிரஸ் இழந்துள்ளது. ஆனால் ஏன் இழந்தோம் எவ்வாறு இழந்தோம் என்பது குறித்த சுயபரிசோதனையை இதுவரை ஏன் செய்யவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x