Published : 16 May 2019 10:50 AM
Last Updated : 16 May 2019 10:50 AM

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் வரை அனுமதி ஏன்?- தேர்தல் ஆணையத்துக்கு மாயாவதி சரமாரி கேள்வி

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றும் வரை அங்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்ததன் மூலம் தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சத்துடன் செயல்படுவது உறுதியாகிறது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் 17-ம் தேதியுடன் முடியும். வன்முறை காரணமாக இன்று 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மாயாவதி கூறியதாவது:

மம்தா பானர்ஜியை குறி வைத்து அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நாட்டின் பிரதமராக இருப்பவர் இதுபோன்று செயல்படுவது ஆபத்தான போக்கு.

 இது நமது ஜனநாயகத்தை சீர்குலைக்கும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் நெருக்குடிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீ்ர்குலைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் கருதினால் உடனடியாக அங்கு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டியது தானே.

இன்று இரவு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. ஏனெனில் பிரதமர் மோடி இன்று மேற்குவங்கத்தில் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவர் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளித்து விட்டு பின்னர் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு சரியானதா. பாஜக தரும் நெருக்கடிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x