

மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 6-ல் நடைபெற உள்ள நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பழங்குடியின கிராமங்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் அதிகமான கிராமங்களின் நுழைவுப்பகுதியில் பெரிய பலகைப் பாறையிலான முத்திரைக் கல்லில் அரசியல்வாதிகளாக இருந்தாலும் தற்காலிகமாகப் பார்வையிட யார் வந்தாலும் வெளியாட்கள் எவருக்கும் ஊருக்குள் அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கிராமங்கள் அனைத்தும் 19-ம் நூற்றாண்டில் பிர்ஸா முண்டா என்பவரின் தலைமையின்கீழ் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட பாதல்காடி பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளாகும்.
இத்தகைய கிராமங்கள் அனைத்தும் பாதல்காடி கிராமங்கள் என அழைக்கப்படுகின்றன. அதேநேரம் இவற்றை மாவோயிஸ்ட்டுகளின் கோட்டை எனவும் கூறுகிறார்கள். இவை அனைத்தும் முண்டா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள கிராமங்கள் ஆகும்.
இந்திய அரசாங்கத்திற்கு கட்டுப்படாமல் எந்தப் பகுதியும் இந்தியாவுக்குள் இருக்க முடியாது எனும்போது ஜார்கண்டின் இந்த பாதல்காடி கிராமங்கள் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். அதுவும் அரசுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல்?
நமீதா திவேரி என்ற செய்தியாளரைக் கொண்டு பிடிஐ ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டது.
''ஜார்கண்ட்டின் மலைக் கிராமமான பாதல்காடியை தேர்தல் அறிவிப்புகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. ஏனெனில் அது மாவோயிஸ்ட்டுகளின் கோட்டை. கிராமத்திற்குள் நுழையும்போதே பெரிய பாறையிலான முத்திரைக் கல் நம்மை வரவேற்கிறது. ஊரின் கிராமவாசிகளால் இக்கிராமத்தை நிர்வகிக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன; அரசியல்வாதிகளாக இருந்தாலும் தற்காலிகமாகப் பார்வையிட யார் வந்தாலும் வெளியாட்கள் எவருக்கும் ஊருக்குள் அனுமதியில்லை என்று அதிலேயே தெளிவாக கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார்கள்.
பழங்காலக் கடவுளை வழிபடும் பாதல்காடி பகுதியில் கிராமத்தினர் அடங்கிய குரலில் ஒலிக்கும் பாடலுக்கு ஒரு ஆதிவாசிப் பெண் வேகமாக நடனமாடிக் கொண்டிருப்பதை வழிபடுகிறார்கள்.
நாட்டின் மற்ற பகுதிகளைப் போலன்றி, இப்பகுதிகளில் குறிப்பாக பாதல்காடியில் கிராம சபைகள் அல்லது கிராமப் பஞ்சாயத்துகள் நிர்ணயித்துள்ள தனித்தனி விதிமுறைகளைக் கொண்டு கிராம ஆட்சி நடைபெறுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற 100க்கும் அதிகமான பாதல்காடி கிராமங்கள் உள்ளன. மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலேயே இக்கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பழங்குடியினர் இந்திய அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இவர்கள் இந்திய அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறுகிறார்கள்.
இது பிரிட்டிஷாருக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் ஒரு கடுமையான போரை நடத்திய புகழ்பெற்ற ஆதிவாசி பிர்ஸா முண்டாவின் நிலமாகும். அவர் இங்கு கடவுளாக வழிபடப்படுகிறார்.
குந்தி, மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இங்கு நாளை மறுநாள் மே 6 தேர்தல் நடைபெற உள்ளது. தனித் தொகுதியான இதில் இரண்டு முண்டாக்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் பாஜகவின் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்ஜூன் முண்டா. இன்னொருவர் காங்கிரஸைச் சேர்ந்த காளிச்சரண் முண்டா.
ஆனால், இப்பகுதிகளின் தேர்தல் அமைதி கிட்டத்தட்ட விநோதமானது. எப்படியெனில் நாட்டில் வேறு எங்கும் ஜனநாயகத்தின் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த மக்களவைத் தேர்தலை பழங்குடி மக்கள் புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளா நாங்கள்?
பாண்த்ரா கிராம நுழைவு வாயில் உள்ள புனிதக் கல் முத்திரையை ஒவ்வொரு வியாழன் அன்றும் மக்கள் கூடி வணங்குகிறார்கள். அதேபோன்ற ஒரு சடங்கில் 42 வயதான ட்யூத்தி என்பவரும் வணங்கிய பிறகு, "எங்கள் உரிமைகளை எல்லாம் (முதல்வர்) ரகுபார் தாஸ் பறித்துவிட்டார். உரிமைகளைப் பறித்துக்கொண்ட பிறகு ஓட்டு எப்படி போட முடியும்?. மேலும் போராடினால் மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லி எங்களை சுட்டுக் கொல்கிறார்கள்.
வெளியாட்கள் எவருக்கும் அனுமதியில்லாதபோது உங்கள் பிரச்சினைகளை வெளியுலகுக்கு தெரிவிக்கத்தான் வந்துள்ளேன் என்றெல்லாம் பேசி ஒரு பத்திரிகையாளராக எப்படியோ பாதல்காடி கிராமங்களுக்கு உள்ளே சென்றது பெரிய சாதனைதான்
மே 6 அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் ஒருவரும் வாக்கு சேகரிப்பதற்காக இதுவரை இக்கிராமங்களுக்குள் நுழைந்ததில்லை.
கிராமங்கள் மீது அக்கறை காட்டாத அரசுகள்
அரசாங்கம் என்ற அமைப்பின் மீதான நம்பிக்கையற்று இருக்கின்றன இந்த பாதல்காடி கிராமங்கள். இன்னொரு கொடுமை என்னவென்றால் நவீன இந்தியாவின் எந்த அரசும் முன்வந்து குந்தி கிராமங்களுக்கு என்று எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்பதுவும்கூட இந்த இடைவெளியை அதிகரிக்கச் செய்கின்றன'' என்றார் நமீதா திவேரி.
''நீங்கள் குறிப்பிடும் எந்த அடிப்படை வசதிகளும் எங்கள் கிராமத்தில் செய்யப்படவில்லை. என்னைக் கேட்டால் அரசாங்கம் எங்களுக்கு எதுவும் செய்யத் தேவையில்லை. எங்களை நிம்மதியாக விட்டாலே போதும்'' என்கிறார் ரட்டன் ட்யூத்தி.
இதே கருத்தை 27 வயது பிந்தி நாக் என்ற பெண்ணும் எதிரொலிக்கிறார். ''அரசாங்கம் எங்கள் இளைஞர்களை தொந்தரவு செய்கிறது'' என்கிறார்.
இங்கு மட்டுமல்ல, ஹாஸ்டு அல்லது சாமிதித், சிலோடோன் அல்லது கும்குமா எல்லா கிராமங்களிலும் இதே கதைதான். மத்திய, மாநில அதிகாரிகள் யாரும் பார்வையாளர்கள் சந்திப்புக்கான அனுமதி பகுதியிலேயே பேசி அனுப்பி வைக்கப்படுவார்கள். வெளியாட்களை ஊருக்குள் வரவேண்டாம் என்கின்றனர்.
எங்கள் காடு எங்கள் நிலம்
கும்மூரில் தன் பெயரைச் சொல்லிக்கொள்ள விரும்பாத வயதான மனிதர் பேசுகையில், ''வெளியுலகம் எங்களுக்கு அந்நியமாக இருப்பதால் நாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை.
அதுமட்டுமில்லை, பாரத் சர்க்கார் யாருக்கான சர்க்கார்? நிச்சயம் எங்களுக்கு இல்லை. நீங்கள் சொல்லும் சர்க்கார்கள், இங்குள்ள தண்ணீரைக் கூட கொண்டுசென்று விற்கப் போவதாக அறிந்தோம். உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துதான் எங்கள் சர்க்கார். எங்கள் காடு நிலம் ஆகியவற்றைத் துண்டாட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது எங்கள் பிறப்புரிமை'' என்றார்.
எனினும் இப்பகுதிகளில் தேர்தல் வாக்குச்சாவடிகளை அமைக்க அரசாங்கம் மும்முரமாக செயல்பட்டுவருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.