

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை நோக்கிச் சென்றுள்ள நிலையில், தோற்ற அணியில் சதம் அடித்த வீரராகிவிட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி மோசமான நிலையை நோக்கி நகர்திறது. ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையுடன் இருக்கிறது.
குறிப்பாக வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனவந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரைவிட தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்தார். ஆனால், அதன்பின் முன்னேறிய சசிதரூர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சசி தரூர் உள்ளார்.
இந்நிலையில், தான் வெற்றி நிலையில் இருக்க, தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதை எண்ணி ஆதங்கத்துடன் சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
சசிதரூர் ட்விட்டரில் கூறுகையில், "72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் இருக்கிறேன். கிரிக்கெட்டில் அணி தோல்வி அடைந்த நிலையில், சதம் அடித்த பேட்ஸ்மேனாக நான் இருக்கிறேன். கசப்பு இனிப்பு கலந்த உணர்வாக இருக்கிறது. இந்த வெற்றி பிரதிபலிக்க சில காலம் எடுத்துக்கொள்வேன்" எனத் தெரிவித்தார்.