Published : 26 May 2019 07:37 PM
Last Updated : 26 May 2019 07:37 PM

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 10-ம்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் 2-ம் கட்ட மாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்.18-ல் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் காலியாக இருந்த மேலும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என்றும், தேர்தல் நடைமுறைகள் மே 27-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. எனவே, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும்வரை அதாவது மே 27-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து மே 23-ம் தேதி வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவில் எந்தச் சிக்கலும் இல்லாத சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் மே 27-ம்  தேதி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, மே 28 முதல் அரசுப் பணிகள் தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதால் அமைச்சர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், பணியாளர்கள் தங்களது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவர்.

இதனிடயே, தமிழக சட்டப்பேரவையில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவியேற்றுக் கொள்வர். 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x