Last Updated : 22 May, 2019 12:08 PM

 

Published : 22 May 2019 12:08 PM
Last Updated : 22 May 2019 12:08 PM

நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஒப்புகை சீட்டுடன், இவிஎம் ஒப்பிடுவதால் தேர்தல் முடிவுகள் தாமதமாகும்

7 கட்டங்களாக முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க இருக்கும்நிலையில், இறுதிகட்ட முடிவுகளை அறிவிப்பது தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டையும், வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணி இருப்பதால், தாமதமாகும் என  காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 542 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 90 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர், 61.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை(23-ம்தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது.

வழக்கமாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள்விரைவாக கணக்கிடப்பட்டு விரைவாக அறிவிக்கப்படும். மாலைக்குள் எந்த கட்சிக்கு  பெரும்பான்மை கிடைக்கும் என்ற உறுதியாக தகவல் தெரியவரும்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக ஒவ்வொரு சட்டப்பேரைவத் தொகுதியிலும் 5 வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒப்புகைசீட்டு எந்திரம் மற்றும் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் 10.30 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 20 ஆயிரத்து 600 இடங்களில் இவிஎம்-விவிபிஏடி எந்திரங்களை ஒப்பிடும் பணிகள் நடக்க உள்ளன.

ஆனால், இதுவரை நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிட வில்லை. இருப்பினும், தொடக்கத்தில் தபால்வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும்.

அதன்பின் பாதுகாப்பு படைக்கான சர்வீஸ் வாக்குகள் எண்ணப்படும் அதாவது, ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் படை, மாநில போலீஸார் ஆகியோரின் வாக்குகள் எண்ணப்படும். வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோர் பதிவு செய்யும் வாக்குகளும் சர்வீஸ் வாக்குகளாக கருத்தில் கொள்ளப்படும்.

ஒட்டுமொத்தமாக 18 லட்சம் பதிவு செய்யப்பட்ட சர்வீஸ் வாக்குகளில் 16.49 லட்சம் வாக்குகள் தபால் மூலம் கடந்த 17-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளன. ஆதலால், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, 2 மணிநேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்.

இறுதியாக வாக்குஎந்திரம், ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவற்றை ஒப்பிடும் பணி தொடங்கும். முதலில் ஒப்புகை சீட்டு எந்திரங்களில் உள்ள சிலிப்புகள் கணக்கிடப்படும், அதன்பின், வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்படும். வாக்கு எண்ணக்கையில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், ஒப்புகை சீட்டில் இருக்கும் எண்ணிக்கையை இறுதியாகக் கொள்ளப்படும்.

இந்த வாக்கு எந்திரம், ஒப்புகைசீட்டு எந்திரம் ஒப்பிடும் பணியால் ஏறக்குறைய தேர்தல் முடிவு அறிவிப்பது 5 மணிநேரம் முதல் 6 மணிநேரம் வரை தாமதமாகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x