

கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து பெங்களூரு சென்ற ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் வாய்ப்பை நேற்று தவறவிட்டனர்.
தேர்வு மைய அதிகாரிகளிடம் மாணவர்கள் சார்பில் கண்ணீர் விட்டுக் கதறியும், அவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் ஒரு ஆண்டு வீணாகிவிட்டதாக மாணவர்கள் கண்ணீர் விட்டது வேதனையாக இருந்தது.
ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதம்
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில் கர்நாடக மாநிலம், ஹம்பி நகரில் இருந்து பெங்களூருவுக்கு ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுந்த ஹம்பி எஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை புறப்பட்டனர். இந்த ஹம்பி எக்ஸ்பிரஸ் மைசூரு வழியாக பெங்களூரு வந்தடையும்.
ஆனால், ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பெரும்பாலான மாணவர்களுக்கு பெங்களூருவின் புறநகரில் நேற்று நண்பகல் 2 மணிக்குத் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், ரயில் 7 மணிநேரம் தாமதமாக யஷ்வந்த்பூர் சந்திப்பை நண்பகல் 2.36 மணிக்கு வந்தடைந்தது.
மாணவர்கள் கண்ணீர்
அதன்பின் அலறியடித்து, மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் தேர்வு மையத்துக்குச் சென்றபோது அங்கு தேர்வு தொடங்கி 30 நிமிடங்கள் ஆகியிருந்தது. நீட் தேர்வு முறை விதிமுறைகள்படி, நண்பகல் 1.30 மணிக்கு மேல் எந்த மாணவர்களையும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி மாணவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள், தங்களின் ஒரு ஆண்டு படிப்பு வீணாகிவிட்டதே என்று கண்ணீர் விட்டதைக் காணும்போது பரிதாபமாக இருந்தது.
தேர்வு மைய அதிகாரிகளிடம் மாணவர்களும், பெற்றோர்களும் மன்றாடியும் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். ரயில் தாமதத்துக்கு மாணவர்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று பெற்றோர் வாதிட்டும் அதை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
மறுப்பு
மாணவர் ஒருவரின் உறவினர் கூறுகையில், "நாங்கள் பலமுறை கேட்டுக்கொண்டும், ரயில் தாமதத்தைச் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். மாணவர்களின் நுழைவுச்சீட்டில் தேர்வு நடக்கும் மையம் இருக்கும் பகுதிக்கு ஒருநாள் முன்கூட்டியே வந்து பார்வையிட்டுச் செல்ல வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். எங்கள் தவறு இல்லை, நீங்கள்தான் பொறுப்பு என்று கூறியதை ஏற்க முடியவில்லை'' என்றார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல், சாலையின் ஓரத்தில் பெற்றோர்களுடன் கண்ணீருடன் நிற்பதைப் பார்த்த மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விளக்கம்
இதுதொடர்பாக தென் மேற்கு ரயில்வே துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி இ.விஜயாவிடம் கேட்டபோது, " ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கக் கோரி மத்திய மனித வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்படும்" எனத் தெரிவித்தார்.
ரயில் தாமதம் ஏன்?
ஹம்பி எஸ்பிரஸ் ரயில் தாமதத்துக்கு என்ன காரணம் என ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கத்தில், "ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக வரும் பாதையில் இருந்து மாற்றி பெல்லாரி ராயதுர்கா, சிக்ஜாஜுர், அரிசிக்கேரி, தும்கூரு வழியாக பெங்களூரு வந்தது. வழக்கமாக இந்த ரயில் பெல்லாரி, குண்டக்கல், தர்மாவரம், பெனுகொண்டா, யேலஹங்கா வழியாக வரும்.
குண்டக்கல், கல்லூரு பகுதியில் இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி நடப்பதால் ரயில் தாமதமாக வந்தது. ரயில் வேறு பாதையில் செல்வது குறித்து பயணிகளின் செல்போன் எண்ணுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. வழக்கமாக ஹூப்ளி நகரில் இருந்து மாலை.6.20 மணிக்கு புறப்படும் ரயில், 2 மணிநேரம் தாமதமாக இரவு 8.20 மணிக்கு புறப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
தேர்வு மையம் மாற்றம்
ரயில் தாமதம் ஒருபக்கம் மாணவர்களின் துன்பத்துக்குக் காரணமாக இருக்க, ஏற்கெனவே வந்து சேர்ந்த மாணவர்களின் தேர்வு மையம் மாற்றப்பட்ட தகவலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து, அவசரமாகத் தேர்வு மையத்தைக் கண்டுபிடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக சித்ரதுர்கா நகரைச் சேர்ந்த ஹெச் சிவண்ணா கூறுகையில், "என் மகனுக்கு யேலகங்காவில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு மையம் முதலில் ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து 44 கி.மீ . தொலைவில் இருக்கும் தயானந்த சாஹர் பல்கலைக்கழகத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்ட தகவல் அறிந்தோம். உடனடியாக ஒரு வாடகைக் காரைப் பிடித்து, என் மகனையும், எங்களைப் போன்ற பாதிக்கப்பட்டிருந்த மற்ற மாணவர்களையும் அழைத்துக்கொண்டு தேர்வு மையத்துக்குச் சென்றேன்.
தேர்வு மையம் மாற்றப்பட்டது குறித்து எங்களுக்கு முறையான இமெயில், எஸ்எம்ஸ் கூட அனுப்பவில்லை. பல மாணவர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படாததால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு வந்த பின் வேறு மையம் ஒதுக்கப்பட்டதை அறிந்து அவசரமாக ஓடி பலர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தனர். இதுபோன்று தேர்வு மையத்தை மாற்றும் போது, அதிகாரிகள் முறைப்படி முன்கூட்டியே மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது மாணவர்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும்.
நீட் தேர்வு மையம் நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி கர்நாடகாவில் 4 தேர்வு மையங்களை மாற்றியது" எனத் தெரிவித்தார்.
பெற்றோர்கள் கோரிக்கை
ஃபானி புயல் போன்ற இயற்கை பேரிடரால் ஒடிசா மாநிலத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக ரயில் தாமதம் போன்ற மனிதத் தவறுகளுக்கு, மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து தண்டனை அனுபவிக்கிறார்கள். இதுபோன்ற அதிகாரிகள் தவறுகளுக்கு மாணவர்களைப் பலிகடாவாக ஆக்குவது எந்தவிதத்திலும் நியாயமாகாது.
ஒடிசாவில் நீட் தேர்வு நடத்தும்போது, ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுதமுடியாமல் போன நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.