Published : 25 Sep 2014 11:12 AM
Last Updated : 25 Sep 2014 11:12 AM

மங்கள்யான் அனுப்பிய முதல் புகைப்படம் இஸ்ரோ வெளியிட்டது: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்து அனுப்பிய முதல் வண்ண ப‌டம் நேற்று வெளியானது. மங்கள்யான் எடுத்த புகைப்படத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

நேற்று முன்தினம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா செயல்படுவதற்குத் தேவையான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு கேமரா முதன் முதலாக செயல்பட ஆரம்பித்தது.

செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் பயணிக்க தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 வண்ண‌ புகைப்படங்களை எடுத்து, அவற்றை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு மங்கள்யான் அனுப்பியுள்ளது.

புகைப்படங்களை ஆராய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பணி வெற்றியடைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் மங்கள்யான் திட்ட இயக்குநர் அருணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மங்கள்யான் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடியிடம் வழங்கினர். புகைப்படங்களை பார்த்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.

மங்கள்யான் விண்கலம் 6 மாதங்கள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து தொடர்ந்து வண்ணப் புகைப்படங்களை எடுத்து அனுப்பி கொண்டே இருக்கும். அந்த புகைப்படங்களைக் கொண்டு செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சி அடுத்த நிலைக்கு நகரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x