Last Updated : 25 May, 2019 02:12 PM

 

Published : 25 May 2019 02:12 PM
Last Updated : 25 May 2019 02:12 PM

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆண்டவன் அழகான தீர்ப்பு எழுதிவிட்டார்: ஜெகன்மோகன் ரெட்டி கருத்து

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆண்டவன் அழகான தீர்ப்பு எழுதிவிட்டார், தண்டித்துவிட்டார் என்று ஆந்திர மாநில முதல்வராகத் தேர்வான ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் 30-ம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார்.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வான 151 எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் அமராவதியில் உள்ள தடபள்ளி இல்லத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை தாங்கினார்.

மூத்த தலைவர் போட்ஸா சத்யநாராயணா ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரை சட்டப்பேரவை தலைவராக முன்மொழிந்தார். அதன்பின் தர்மன பிரசாத் உள்ளிட்டோர் வழிமொழிந்த பின் ஒருமனதாக முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், " கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் நமது கட்சியில் உள்ள 23 எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு விலைக்கு வாங்கினார். ஆனால் இப்போது இந்த முறை தேர்தலில் 23 எம்எல்ஏக்கள் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்துள்ளார்கள். 23 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய சந்திரபாபு நாயுடுவுக்கு 23 பேரை மட்டுமே கொடுத்து அழகான தீர்ப்பை ஆண்டவன் எழுதிவிட்டார்.

சட்டவிரோதமாக எங்களின் 3 எம்.பி.க்களை சேர்த்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த முறை 3 எம்.பி.க்கள் மட்டுமே கிடைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் என் தந்தையின் வார்த்தைகள் பலித்துவிட்டன. 50 சதவீத வாக்குகளை மக்களிடம் இருந்து பெறுவது சாதாரண விஷயமல்ல.

மக்களின் நம்பிக்கையை நிறைவு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். 2024-ம் ஆண்டும் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அனைவரும் மக்கள் பணியாற்ற வேண்டும்" என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

இன்று பிற்பகலுக்குப்பின், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருடன் சேர்ந்து ஹைதராபாத் செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மனைச் சந்தித்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதன்பின் முறைப்படி ஆளுநர் ஜெகனுக்கு அழைப்பு விடுப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x