Published : 17 May 2019 09:30 PM
Last Updated : 17 May 2019 09:30 PM

108 இளம் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தலைவர் கலந்துரையாடல்

இளம் விஞ்ஞானி திட்டமான யுவிகா 2019-ன் கீழ், நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 108 பள்ளி மாணவர்களுடன் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் கலந்துரையாடினார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று இளம் விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவனிடம், இந்திய விண்வெளித்துறை, கோள்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு, புவிப் பாதுகாப்பு, விண்வெளி, பொருளாதாரம் தொடர்பான பல கேள்விகளைக் கேட்டனர். அவர்களின் ஐயங்களை தெளிவுபடுத்தும் விதத்தில் டாக்டர் சிவன் அவர்களுக்கு விரிவாகப் பதிலளித்தார்.  

2020-ல் சூரியனின் வெளிப்பரப்பை ஆராய்வதற்கான மிஷன் ஆதித்யா திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்திருப்பதாக, ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், டாக்டர் சிவன் குறிப்பிட்டார்.

இஸ்ரோ நிறுவனம் மற்ற அமைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சிவன், திட்டமிடுதலும், வெளிப்படைத்தன்மையும், குழுவாக இணைந்து பணியாற்றுவதும், அமைப்பை அவ்வப்போது மீளாய்வு செய்வதும் இஸ்ரோவின் சிறப்பு அம்சங்கள் என்று தெரிவித்தார். இஸ்ரோ தொழில்துறையுடனும், கல்வித் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதாகவும், தரத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து பணிகளையும் மேற்கொள்வதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, மாணவர்களிடம் உரையாற்றிய டாக்டர் சிவன்,  ''மிகச்சிறந்த நிறுவனத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.  அவர்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பாக 108 மாணவர்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.  சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்'' என்றார்.   

யுவிகா திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், அகமதாபாதில் உள்ள விண்வெளி செயலாக்க மையம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி செயலாக்க மையம் ஆகிய நான்கு மையங்களில் இரண்டு வார காலத்திற்கு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்தப் பயிற்சி இம்மாதம் 13 ஆம் தேதியன்று தொடங்கியது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் செயலாக்க நுட்பங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, நான்கு மையங்களில் இருந்தும் மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருகை தந்து இஸ்ரோ தலைவரிடம் கலந்துரையாடினர்.

தமிழ்நாட்டிலிருந்து ஜே.கே. ஆதித்யா, ஆர். நித்யாராஜ், பி.சமீரா ஆகியோரும், புதுச்சேரியிலிருந்து எம்.பவித்ரா, கே.கவிபாரதி, ஜி.மோனிகா ஆகியோரும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்தில் பங்கேற்றனர்.     

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x