Published : 17 May 2019 02:07 PM
Last Updated : 17 May 2019 02:07 PM

கோட்சே குறித்த நிர்வாகிகள் சர்ச்சைப் பேச்சு; பாஜக கொள்கைக்கு எதிரானது: அமித் ஷா எச்சரிக்கை

கோட்சே குறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் தெரிவித்த கருத்து கட்சியின் கொள்கைக்கு எதிரானது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

காத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் நேற்று கூறும்போது, “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும், என்றைக்குமே அவர் தேச பக்தர்தான். அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்கள், முதலில் அவர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கோட்சே குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்” என தெரிவித்தார்.

பிரக்யா தாக்குரின் இந்தக் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறும்போது, “பிரக்யா தாக்குரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது. அவரது கருத்துடன் பாஜக உடன்படவில்லை. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? இதுதொடர்பாக பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமது கருத்துக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது பெரும் சர்ச்சையானதை அடுத்து, தமது கருத்தை போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் நேற்று திரும்பப் பெற்றார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி நளினி குமார் கட்டீல், ‘‘கோட்சே ஒருவரை தான் கொன்றார். மும்பை பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதி காசிப் 72 பேரை கொன்றார். முன்னாள் பிரதமர் ராஜிவ் 17,000 பேரை கொன்றார். இவர்களில் யார் கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’’ என தெரிவித்து இருந்தார்.

இதுபோலவே பாஜக மூத்த தலைவரான அனந்தகுமார் ஹெக்டேவும் இதேபோன்று கோட்சே பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்காக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் கோட்சே குறித்த பாஜக நிர்வாகிகளின் பேச்சு குறித்து அக்கட்சித் தலைவர் அமித் ஷா இன்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர்  கூறியதாவது:

கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. பாஜகவை சேர்ந்த பிரக்யா சிங் தாகுர், அனந்தகுமார் ஹெக்டே கட்டீல் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களில் கட்சிக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. இதனை ஏற்க முடியாது.

அவர்கள் தங்கள் பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரியுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கோரப்படும். அவர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும். 10 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைத்துள்ளேன்.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x