Last Updated : 23 May, 2019 12:00 AM

 

Published : 23 May 2019 12:00 AM
Last Updated : 23 May 2019 12:00 AM

புல்வாமா தாக்குதலின் ரணம் இன்னும் ஆறவில்லை; தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா போராடும்: எஸ்சிஓ மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு

தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா கடுமையாகப் போராடும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விவாதித்தனர். அதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

இதன் அடுத்தகட்டமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கிர்கிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சின்கிஸ் ஐடர்பேகோவை நேற்று சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனையை நடத்தினர்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட எங்கள் சகோதர, சகோதரிகளை நினைத்து நாங்கள் வாடுகிறோம். அவர்களின் துயர் நீங்க நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல் இந்தியாவின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலின் ரணம் இன்னும் ஆறவில்லை. தீவிரவாதப் பிரச்சினையை வேரறுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபடும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தை பலப்படுத்துவது தொடர்பாக பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பை (ஆர்ஏடிஎஸ்) உருவாக்கியுள்ளோம். இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான யோசனைகளை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x