ஜம்மு-காஷ்மீர் மக்கள் பீதியடைய வேண்டாம்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீர் மக்கள் பீதியடைய வேண்டாம்: மத்திய அரசு
Updated on
1 min read

கன மழை வெள்ளத்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், "ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 76,500-க்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மீட்டுள்ளனர். இன்னும், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆபத்தான நேரங்களில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் துணை ராணுவ படைகள் மேற்கொண்டுள்ள பணிகள் மிகவும் பாரட்டுக்குரியது. விமானப்படை மற்றும் ராணுவத்தால் மீட்பு படைக்காக சிறப்பு அனுமதியுடன் சுமார் 80 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகமும் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

நமது ராணுவத்தால் மட்டும் இதுவரை சுமார் 1,50,000 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர தண்ணீர் விநியோகத்தில் சண்டிகர் மற்றும் டெல்லி மாநிலமும் உதவி அளித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. ஒவ்வொரு பகுதி ஆணையர்களுக்கும் அவ்வப்போதைய நிலவரத்திற்கு ஏற்றவாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிப்படைந்தது நமது மீட்புக் குழுவினருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இவை அடுத்த இரண்டு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும். தற்போதை நிலையில் மீட்பு குழுவினர் செயற்கைக்கோள் வழியான போன்கள் மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in