

கேதார்நாத், பிடிஐ
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது தன்னை கேதார்நாத் கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இறுதிக் கட்டத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க இருப்போர் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கு உருவம் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், 11,755 அடி உயரத்தில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது.குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது தற்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களாகவே தீவிர பிரச்சாரம் செய்துவந்தார், பிரச்சாரம் முடிந்தநிலையில், நேற்று கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் உத்தரகண்ட் மாநிலம் ஜோலிகிராண்ட் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்றார்.
கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்திய அவர் பின்னர் அங்கு நடந்து வரும் பணிகளை கானொலி மூலம் பார்வையிட்டார். கேதார்நாத் குகைக்கோயிலுக்கு நடந்து சென்ற பிரதமர் மோடி அங்கு தியாணத்தில் ஈடுபட்டார். அங்கு நேற்று இரவு முழுவதும் தியானத்தில் இருந்த மோடி, இன்று காலை கேதார்நாத் கோயிலிலும், பத்ரிநாத் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், " இறைவனிடம் எனக்காக எதும் கேட்பது என்னுடைய இயல்பு அல்ல. நாம் கேட்டுத்தான் எதையும் கடவுள் கொடுக்கமாட்டார், கடவுள் நம்மிடம் எதையும் கேட்கமாட்டார், அவர் வழங்கும் சக்தி படைத்தவர்.
எல்லாம் வல்ல இறைவன் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் மகிழ்ச்சி, வளம், உடல்நலத்தையும் வழங்குவார். தேர்தல் நேரம் என்பதால், இங்கு வரவில்லை. என் அதிர்ஷ்டம் காரணமாக பல முறை இந்த கோயிலுக்கு வந்திருக்கிறேன்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது என்னை கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல அனுமதித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கேதார்நாத் கோயில் அமைந்தருக்கும் நகரம் விரைவில் நன்கு மேம்படுத்தப்படும் என்ற தகவலை கூறுகிறேன். வளர்ச்சிப்பணிகளால் இயற்கை, சுற்றுப்புறச்சூழல், சுற்றுலா எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. அனைத்து வகையான பணிகளையும் கானொலி மூலம் பார்த்து அறிந்தேன்.
இன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்கள் என்று நம்புகிறேன். ஒரு வாக்கு தேசத்தின் வளர்ச்சிப் பாதையை அமைக்கும்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.