விஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

விஐபி கலாச்சாரத்தை விட்டுவிடுங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Updated on
1 min read

விஐபி கலாச்சாரத்தை விட்டுவிட்டு, சாமானியரைப் போல் மக்களிடம் பழகுங்கள். பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசுங்கள் என்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வான எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

''புதிதாக நாடாளுமன்றத்துக்கு மக்களால் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். விளம்பரத்தின் வலையில் ஒருபோதும் சிக்கிவிடாதீர்கள். இந்த தேசம் விஜபி கலாச்சாரத்தை வெறுக்கிறது.

எந்த இடத்துக்குச் சென்றாலும் நான் எம்.பி, எனக்கு சிறப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள். விமான நிலையத்துக்குச் சென்றால்கூட, அங்கு வரிசையில் மக்களோடு மக்களாக நின்று சோதனைக்கு இடம் தாருங்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை.

நான் ஒரு எம்.பி. எவ்வாறு வரிசையில் நிற்க முடியும்? என்று கேள்வி கேட்காதீர்கள். பொதுமக்களை மனதில் வைத்து உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த தேசத்தில் சாமானியரைப் போன்று நீங்களும் ஒரு குடிமகன் என்பதை மறந்துவிடக்கூடாது. அதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.

சாமானிய மக்களைப் போல் அனைத்து இடங்களிலும் வரிசையில் எம்.பி.க்கள் நிற்பதில் தவறில்லை. விஐபி கலாச்சாரத்தைப் புறந்தள்ளி தனது வாழ்க்கையில் செயல்பட்ட மறைந்த மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரை நினைவில் கொள்ள வேண்டும்.

விளம்பரத்தின் வலையில் எம்.பி.க்கள் சிக்கிவிடக்கூடாது. ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் கருத்து தெரிவிக்கும்போது எந்தவிதமான சிக்கலும் ஏற்படாதவாறு கவனத்துடன் பேசவும் எழுதவும் செய்ய வேண்டும். எந்தவிதமான விஷயத்துக்கும் கருத்து தெரிவிக்கும்முன், அதுகுறித்து தெளிவாக அறிந்த பின், உண்மை நிலையை உணர்ந்தபின் பேச வேண்டும்.

நீங்கள் செல்லும் வாகனங்களில் இருக்கும் சிவப்பு விளக்குகளை அகற்றிவிடுங்கள். அந்த விளக்குகளால் எந்தவிதமான பொருளாதார நலனும் யாருக்கும் வந்துவிடாது. நீங்கள் அந்த விளக்கை அகற்றுவதன் மூலம் மக்களுக்கு நல்ல செய்தியைக் கூறமுடியும்.

விரைவில் அனைத்து எம்.பி.க்களுக்கும் உரிய கடமைகள், பொறுப்புகள், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த திட்டங்கள் வகுத்து அளிக்கப்படும். வெற்றி பெற்ற எம்.பி.க்கள் தங்கள் தொகுதியின் வளர்ச்சி பற்றி மட்டும் சிந்திக்காமல், தேசத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்றும் சிந்திக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின் நாடாளுமன்றத்துக்கு அதிகமான அளவில் பெண் எம்.பி.க்கள் இந்த முறைதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெண்களுக்கு அதிகாரமளித்தல் இதன் மூலம் சாத்தியமாகி இருக்கிறது''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in