

கட்சியின் வெற்றியில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பிருக்கிறது என விடுபட்ட அமைச்சர்கள் குறித்து புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ள சாத்வி நிரஞ்சன் ஜோதி கருத்து கூறியிருக்கிறார்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேனகா காந்தி, சுரேஷ் பிரபு, ஜே.பி.நட்டா, ராதாமோகன் சிங் ஆகிய அமைச்சர்களுக்கும், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மகேஷ் சர்மா, ஜெயந்த் சின்ஹா, அனந்த குமார் ஹக்டே, அனுப்பிரியா படேல், விஜய் கோயல், கே.அல்ஃபோன்ஸ், ரமேஷ் ஜிகாஜிநாகி, ராம் க்ரிபால் யாதவ், சத்ய பால் சிங் ஆகியோருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள சாத்வி நிரஞ்சன் ஜோதி, "பழைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிலருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. இந்த அரசை முன்னெடுத்துச் செல்வதில் ஒவ்வொரு பாஜக பிரமுகருக்கும் பங்கிருக்கிறது. அரசை வெற்றிப் பெறச் செய்ததில் எல்லோருக்குமே சமமான பொறுப்பிருந்தது.
நான் மட்டுமே ஏதோ சிறப்பாக செய்துவிட்டதால் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது அப்படி செய்யாதவர்களுக்கு கிடைக்கவில்லை என்றெல்லாம் அர்த்தம் ஏதுமில்லை. சுஷ்மா ஜி அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும்கூட அவர் என்னைப் போன்ற ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துசக்தி. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும்கூட அவர் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிப்பார்" என்றார்.
நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 பேர் நேற்று பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.