Published : 25 May 2019 04:32 PM
Last Updated : 25 May 2019 04:32 PM

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி: மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முடிவு?

ஆந்திரா மாநில முதல்வராக விரைவில் பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றை கேட்கவும், பிரச்சினை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வான 151 எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் அமராவதியில் உள்ள தடபள்ளி இல்லத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். வரும் 30-ம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார்.

இந்தநிலையில், முதல்கட்டமாக ஜெகன் மோகன் ரெட்டி நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு மத்தியில் ஆதரவளிப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அவர் பேசக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரவையில் சேராமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவோ அல்லது பிரச்சினை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கவோ ஜெகன் மோகன் ரெட்டி முன் வரக்கூடும் எனத் தெரிகிறது. மத்திய அரசுடனும, பிரதமர் மோடியுடனும் நல்லுறவை பேண அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கக்கூடும் எனவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x