

மும்பையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்துவந்த மருத்துவர் பாயல் தாட்வியின் மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணை மும்பை க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் மனுநாத் சிங்கே, "மருத்துவர் பாயல் தாட்வியின் மரணம் தொடர்பான வழக்கின் முக்கியத்துவத்தையும் ஆழத்தையும் கருதி வழக்கு விசாரணை மும்பை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
மும்பை பிஎல்ஒய் நாயர் மருத்துவமனையில் பயின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி பாயல் தாட்வி
பாயல் தாட்வி தனது மூன்று சக பெண் மருத்துவர்களால் சாதிரீதியான ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். கழிப்பறைக்குச் சென்றுவிட்டு பாயலின் போர்வையில் கால் துடைப்பது, எச்சில் துப்புவது, வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவது என்று சொல்லக் கூசும் பல அநாகரிகமான செயல்களில் இறங்கியிருக்கிறார்கள் அந்தப் பெண் மருத்துவர்கள். ‘இடஒதுக்கீட்டில் வந்தவள்’ என்று பிரசவம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல்லாமும் வாட்ஸ்அப்பில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பாயல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காக கருதப்பட்டது. ஆனால், பாயலின் குடும்பத்தார் இது கொலை எனக் கூறுகின்றனர். இந்நிலையில், வழக்கு விசாரணை க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தாட்வியுடன் படித்த பக்தி மெஹ்ரா, ஹேமா அகுஜா, அங்கிதா கண்டேல்வால் ஆகியோரை போலீஸார் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.