

முன்னால் பிஹார் முதல்வர் ராப்ரி தேவியின் பாட்னா வீட்டில் காவல் பணியிலமர்த்தப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிஆர்பிஎஃப் 122 பட்டாலியனைச் சேர்ந்த கிரியப்பா கிரசூர் (22) என்பவர் ராப்ரி தேவியின் உயர் பாதுகாப்பு சர்க்குலர் சாலை பங்களாவில் பணியாற்றி வந்த நிலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தலைமைச் செயலக உதவி போலீஸ் உயரதிகாரி ஏ.கே.பிரபாகர் தெரிவித்தார்.
இவரது உடல் கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த மாவட்டமான பாகல்கோட்டில் உள்ள கிராமத்துக்கு அனுப்பப்பட்டது.
இஸ்ரேல் தயாரிப்பான ரைஃபில் மூலம் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதன் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
முந்தைய நாள் தன் மனைவியுடன் தொலைபேசியில் கடும் வாக்குவாதத்தில் இந்த ஜவான் ஈடுபட்டதாகவும் அதன் பிறகே அவர் விரக்தி மனநிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.