Last Updated : 20 May, 2019 12:29 PM

 

Published : 20 May 2019 12:29 PM
Last Updated : 20 May 2019 12:29 PM

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி தீவிரம்: மம்தா பானர்ஜியை இன்று சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்கும் நோக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஆனால் 7-வது கட்டத் தேர்தல் தொடங்கியதில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக அல்லாத கூட்டணியை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அன்றைய தினமே சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார். இந்நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் பாஜக அல்லாத கூட்டணியைக் கட்டமைக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டு கடந்த ஒருவாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

அதேசமயம் இவருக்குப் போட்டியாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

இந்த சூழலில் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்திக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

இது குறித்து தெலங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "சந்திரபாபு நாயுடு இன்று பிற்பகலில் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருவரும் மகாகட்பந்தன் (மெகாகூட்டணி) அமைப்பது குறித்துப் பேசுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, கடந்த வாரங்களில் தான் முக்கிய அரசியல் தலைவர்களுடன் சந்தித்த விவரங்கள், கூட்டணி குறித்த முக்கியத்துவம் ஆகியவை குறித்து மம்தா பானர்ஜியிடம் சந்திரபாபு நாயுடு விளக்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x