

டெல்லி மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால் அது கேஜ்ரிவால் மீதான அதிருப்தியின் எதிரொலியே என டெல்லி காங்கிரஸ் தலைவரும், வடகிழக்கு டெல்லி காங்.,வேட்பாளருமான ஷீலா தீட்சித் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மக்களை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மியின் செயல்திறன் என்னவாக இருந்தது என்ற ஆய்வு குறித்து செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கேஜ்ரிவால், "டெல்லியில் கடைசி தருணத்தில் 13% முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸுக்கு ஆதரவாக திரும்பியது" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஷீலா தீட்சித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எனக்காக மட்டுமே வாக்களிக்குமாறு யாரும் மக்களிடம் கோரவில்லை.
ஆனால், மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் எங்களது வரலாறு அப்படி இருக்கிறது.
மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர் என்றால் அது அர்விந்த் கேஜ்ரிவால் அரசின் மீதான அதிருப்தியின் எதிரொலி.
கேஜ்ரிவால் சொல்லும் அரசியல் கணக்கு எனக்குப் புரியவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கே அளிப்பதற்கான உரிமை இருக்கிறது.
கேஜ்ரிவால் அரசாட்சியின் முறை என்னவென்றே மக்களுக்குப் புரியவில்லை. அதனால்தான் அவர்கள் எங்களைத் தேடுகின்றனர்.