

ஆந்திர முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி தான் முதல்வராகக் கையெழுத்திடும் முதல் கோப்பு, மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கும் திட்டம் சார்ந்ததாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் தெலங்கானா - ஆந்திரா பிரிவினைக்க்குப் பின்னர் ஆந்திராவின் 2-வது முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் இ.எல்.நரசிம்ம ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்திரா காந்தி முனிசிபல் அரங்கில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
முதல்வரான பின்னர் அவர் முதல் அறிவிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அத்துடன் மாநிலத்தின் ஊழலற்ற ஆட்சி நடைபெறும் என்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஒவ்வொரு மூத்த குடிமக்களும் மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியமாகப் பெறுவர். இதுவே முதல்வராக நான் பொறுப்பேற்றவுடன் இடவிருக்கும் முதல் கையெழுத்து. ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.2500 வழங்கப்படும். பின்னர் மூன்று வருடங்களுக்குள் இத்தொகை ரூ.3000 என உயர்த்தப்படும்.
மாநிலத்தில் ஊழல் இல்லா ஆட்சி நடக்கும். முதல்வர் அலுவலகத்திலேயே ஊழல் புகாரை தெரிவிக்க தனிப்பட்ட கால் சென்டர் அமைக்கப்படும். யார் வேண்டுமானாலும் முதல்வரை எளிதில் அணுக இயலும்.
அக்டோபர் 2-ம் தேதிக்குள் 1.6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கிராம செயலகம் வாயிலாக பென்ஷன் முதல் கல்விக் கட்டண சலுகை வரை எல்லாவற்றையும் மக்கள் இனி வெறும் 72 மணி நேரத்தில் பெற்றுவிட இயலும்.
கிராமப்புற தன்னார்வலர்கள் என்ற பதவி உருவாக்கப்படும். இந்தப் பணிக்கு ரூ.5000 சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு 50 குடும்பங்களுக்கும் ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் அரசு இயந்திரங்கள் ஊழலற்ற வெளிப்படையான அமைப்பாக செயல்பட முடியும்.
கிராமப்புற செயலர்கள் வேலைக்கு விண்ணப்பித்த 72 மணி நேரத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துவிடும்.
எனது நலத்திட்டங்கள் சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் சென்றடையும். ஆந்திர மக்கள் எனக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். என்னுடன் 3600 கி.மீ பாதயாத்திரை வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். ஏழை, எளியோர், முதியவர்கள் படும்பாட்டை நான் பார்த்திருக்கிறேன். உங்களுடன் நான் துணை நிற்பேன் என உறுதியளிக்கிறேன்.
எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் புத்தகம் போல் கொண்டு வரவில்லை. வெறும் 2 பக்கங்களில் மட்டுமே நாங்கள் அதைக் கொடுத்தோம். தேர்தல் வாக்குறுதியை பைபிளைப் போல குரானைப் போல பகவத் கீதையைப் போல் பாவித்து அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திர தேர்தலில் 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.சி 151 இடங்களில் வெற்றி பெற்ற்றது. தெலுங்கு தேசம் 102 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 22 இடங்களைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.