

மோடி ஆட்சி நிர்வாகத்தின்கீழ் நக்சலிஸம் வெறும் 15 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று பாஜக தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. அம்மாநிலத்தில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:
''காங்கிரஸ் ஆட்சியின்போது தேசம் நக்சலிஸத்தை எதிர்கொண்டுவந்தது. ஆனால் பிரதமராக நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கும் பொறுப்பேற்றதிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 சதவீத நக்சலிஸம் மட்டுமே உள்ளது.
குண்டர்களைப் பார்த்து போலீஸ் பயந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் தற்போது நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் இருவரும் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வேலை செய்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது உள்நாட்டுப் பாதுகாப்பு மிகவும் வலுவாக உள்ளது.
இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அனைத்து திசைகளிலும் நான் சென்றிருக்கிறேன். எல்லா இடங்களிலும் மோடி மோடி என்று தான் மக்கள் அவர் புகழ் பாடுகின்றனர். 130 கோடி மக்களின் ஆசீர்வாதம் அவருக்கு நிச்சயம் உண்டு. மீண்டும் மோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் தீர்மானித்திருப்பதை வரும் மே 23 அன்று நாம் தெரிந்துகொள்ளலாம்.''
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
இரண்டு தினங்களுக்கு முன், மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குண்டு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தகர்த்தனர். இந்த பயங்கரத் தாக்குதலில் 15 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.