

இந்தியாவின் ஒரே ஒரு ஒராங்குட்டன் குரங்கு ஒடிசாவின் நந்தன் கண்ணன் வனவிலங்குப் பூங்காவில் மறைந்தது. பின்னி என்ற அந்த 41 வயதான ஒராங்குட்டன் குரங்குக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டிருந்தது.
அது மட்டுமல்லாமல் அதன் தாடையில் ஒரு புண்ணும் ஏற்பட்டிருந்திருக்கிறது. அந்தப் புண்ணை பின்னி தொடர்ந்து சொரிந்து காயப்படுத்தியுள்ளது. இதனால் குரங்கு இறந்துபோனது.
இது குறித்து நந்தன் கண்ணன் வனவிலங்குப் பூங்காவின் மேலாளர் அலோக் தாஸ் கூறும்போது, "ஒரங்குட்டன் வகை குரங்குகள் இந்தியாவைச் சார்ந்தது இல்லை. பின்னியை நாங்கள் புனேவில் இருந்து கொண்டுவந்தோம். பின்னியின் பிறப்பிடம் சிங்கப்பூர்.
பின்னி ஏற்கெனவே வயது மூப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் சுவாசக் கோளாறு பிரச்சினையையும் புண்ணால் ஏற்பட்ட தொற்றையும் நீக்க எவ்வளவோ சிகிச்சை கொடுத்தோம். ஆனால், சிகிச்சை பலனளிக்கவில்லை.
டெலிகான்ஃபரன்ஸ் மூலம் வெளிநாட்டு மருத்துவர்களிடம் பின்னியைக் காட்டியும் மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தோம். ஆனால் எதுவுமே எடுபடவில்லை. கடைசியில் பின்னி இறந்துவிட்டது" என்றார்.