கர்நாடகாவில் மீண்டும் குழப்பம்; ஜேடிஎஸ்-காங் கூட்டணியில் பிளவு: சமாதானப் பேச்சில் ஆசாத், வேணுகோபால்

கர்நாடகாவில் மீண்டும் குழப்பம்; ஜேடிஎஸ்-காங் கூட்டணியில் பிளவு: சமாதானப் பேச்சில் ஆசாத், வேணுகோபால்
Updated on
1 min read

கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதையடுத்து அதை சரிக்கட்டும் வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத் ஆகியோர்  பெங்களூரு சென்றுள்ளனர்.

கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி இருந்து வருகிறார்.

225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணியில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.

பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல், ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை பாஜக செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

அதற்கேற்றார்போல் பாஜக தலைவர்கள் மக்களவைத் தேர்தலுக்குப் பின் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அரசு நீடிக்காது என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளையும், காங்கிரஸ் , ஜேடிஎஸ் தலா ஒரு தொகுதியையும் வென்றது. சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் நேற்றுமுன்தினம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள், சுதாகர், ரமேஷ் ஆகியோர் பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். ஆனால், அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல, அது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்று அந்த இரு எம்எல்ஏக்களும் தெரிவித்தனர்.

அதன்பின் காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையிலான கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்தச் சந்திப்புக்குப் பின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ஜூன் 10-ம் தேதிக்குப் பின் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நிலைக்காது என்று பகீர் அறிக்கை வெளியிட்டார்.

இதனால், ஜேடிஎஸ் - காங்கிரஸ் ஆட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால் ஆகியோரை உடனடியாக பெங்களூருக்கு சமாதானம் பேச அனுப்பி வைத்தது. தற்போது பெங்களூரு சென்ற இரு தலைவர்களும் மாநிலத்தில் உள்ள முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாளை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in