Published : 06 May 2019 02:29 PM
Last Updated : 06 May 2019 02:29 PM

மிஸ்டர் க்ளீன் ராஜீவ்காந்தி ஊழல்வாதியாக மறைந்தார்: மோடியின் சர்ச்சைப் பேச்சும்; குவியும் கண்டனங்களும்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை சர்ச்சைக்குரிய விததில் விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியினரும் இன்னும் பிற எதிர்க்கட்சியினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, "ராகுல் காந்தியின் தந்தை நேர்மையானவர், மிஸ்டர் கிளீன் என காங்கிரஸால் சித்தரிக்கப்பட்டவர், ஆனால் கடைசியில் அவரது வாழ்க்கை நம்பர்-1 ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது" எனக் கூறினார்.

அவரது இந்த விமர்சனத்துக்கு பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

அவற்றின் தொகுப்பு:

நாராயண சாமி: பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டுக்காக உயிர் துறந்த ராஜீவ் காந்தியை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடிக்கு தியாகத்தின் அர்த்தம் என்னவென்று தெரியுமா என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ராஜீவ்காந்தி தீவிரவாதத்துக்குப் பலியானார். ஆனால், மோடி அவரை இவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார். மோடியின் அகந்தையைக் கண்டிக்கிறேன். இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயண சுவாமி கூறியுள்ளார்.

குமாரசாமி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் விமர்சனம் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல இது அவரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வார்த்தைகள். பயமும், விரக்தியும் அவரை ஆள்கின்றன. அதன் காரணமாகவே அவர் இவ்வாறு பேசுகிறார். இவ்வாறு கர்நாடகா முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

குஷ்பு: ஒரு முன்னாள் பிரதமர். அதுவும் தேசத்துக்காக உயிர் துறந்த தியாகி குறித்து இன்னொரு பிரதமர் இத்தகைய விஷம் தோய்ந்த பயங்கரமான வார்த்தைகளைப் பேசுவதை உலகம் முழுவதும் எங்குமே பார்த்ததில்லை.  உங்கள் நவடிக்கையால் உங்கள் தாய்க்கு அவப்பெயர் சேர்த்துள்ளீர்கள் மோடி.

குறைந்தபட்சம் உங்களிடம் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிடுங்கள். இதில் இன்னும் பயங்கரமான செய்கை என்னவென்றால் இவ்வளவு அவதூறாகப் பேசிவிட்டு சிறிதும் வருந்தாமல் இருக்கிறார் என்பதே. மோடி வெறுப்பால் நிரம்பியிருக்கிறார். இந்திய அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய தவறே மோடி பிரதமரானதுதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ்: அரசியல் கருத்து வேற்றுமையாக இருந்தாலும்கூட தேசத்துக்காக உயிரிழந்த தியாகிகளுக்கென்று நாம் செலுத்த வேண்டிய மரியாதை இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தை நாமும் உணர வேண்டும். தேர்தலுக்காக அடிப்படை மனிதத்தை தொலைக்க முடியுமா? அதிகாரத்தைக் கைப்பற்ற எவ்வளவு தூரம் கீழே இறங்க இயலும் என்பதையே பிரதமரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, "இவ்விவகாரத்தில் நாம் தாமதமான பதிலளித்திருப்பதற்கு மன்னிக்கவும். நான் பிரச்சாரத்தில் இருந்தேன். காலாவதியான பிரதமர் மோடியின் விமர்சனம் துரதிர்ஷ்டவசமானது. ராஜீவ் காந்தி அவர்கள் இந்த தாய்த்திரு நாட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து உயிரைத் துறந்தார். மோடி பயன்படுத்திய வார்த்தைகளைக் கண்டிக்கிறேஎன்"  எனக் கூறியுள்ளார்.

ராஜ் தாக்கரே: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறும்போது, நரேந்திர மோடிக்கென்று மூன்று அடையாளங்கள் உள்ளன. ஒன்று வெறுப்பு, இரண்டாவது முடிவற்ற பொய், மூன்றாவது பொது வாழ்வில் இருப்பவர்களுக்கான மரியாதையை அடிமட்டம்வரை சென்று சிதைப்பது. ராஜீவ் காந்தி மீதான மோடியின் விமர்சனம் அவரது இந்த மூன்று குணங்களையும் பட்டவர்த்தமாக பறைசாற்றுகிறது. தேசம் நிச்சயமாக அவரை மன்னிக்காது.

திவ்யா ஸ்பந்தனா: ராஜீவ்காந்தி அனைவராலும் நேசிக்கப்பட்ட ரசிக்கப்பட்ட நபர். உங்களையும் அப்படியே எல்லோரும் நேசிக்கட்டும் என வாழ்த்துகிறேன் மோடி ஜி. ராஜீவிடமிருந்து நீங்கள் அன்பைக் கற்றுக் கொள்ளுங்கள்.

ராஜீவின் மறைவுச் செய்தி வந்தபோது நான் 8 வயது சிறுமியாக என் அம்மாவுடன் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் அந்தத் துயரச் செய்தி கேட்டு கதறி அழுதனர்.

ஆண், பெண், சிறுவர்கள், வயதானவர்கள் என எல்லோருமே அழுதனர். யாரும் அந்தச் செய்தியை நம்ப விரும்பவில்லை. ராஜீவ் நல்லவர் அவருக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது என்று மட்டும் வருந்தினர். நான் உணர்ச்சிவயப்பட்டேன். நானும் அழத்தொடங்கினேன். அந்த நினைவு இன்னும் என் மனதில் இருக்கிறது. நாங்கள் அன்றைய தினம் சாப்பிடவே இல்லை.

நான் வளர்ந்த பின்னர் இந்த நினைவை என் நண்பர்களுடன் பகிர்ந்ததுண்டு. அதைப்போலவே நிறைய பேர் பகிர்ந்திருப்பார்கள்.

இப்போது ராஜீவ் காந்தி பற்றி பிரதமர் மோடியின் விமர்சனத்தைக் கேட்கும்போது எனக்கு முதலில் அதிர்ச்சியே ஏற்பட்டது. இப்படிக்கூட யாராலும் பேச முடியுமா எனத் தோன்றியது. மோடி பேசியிருக்கிறார். தேர்தலுக்காக பேசியிருக்கிறார். தேர்தலுக்காக புதிய அளவில் தரம் தாழ்ந்திருக்கிறார்.

இப்போது மோடிக்கு ஒன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். ராஜீவ் எல்லோராலும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டார். அவர் ஒரு நல்ல மனிதர். அதை நீங்கள் என்ன பேசினாலும் மாற்ற இயலாது. ஆனால் உங்களால் ராஜீவின் பண்புகளைக் கற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திவ்யா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி புகார்:

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியுள்ளது.

1989-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது போபர்ஸ் பீரங்கி ஊழல் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கில் ராஜீவ்காந்தி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராஜீவ்காந்தி ஊழல் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி மோடி இப்படி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x