

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா முடிவில் கூட்ட நெரிசலில் சிக்கிய பாலிவுட் பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு எம்.பி. ஸ்மிருதி இரானி உதவி செய்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் 58 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 6000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அரசுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள், தூதரகப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்து விருந்தினர்கள் களைந்து செல்ல ஆரம்பிக்க வாகன நெரிசல் ஏற்பட்டது. அப்போது விழாவில் கலந்து கொண்ட ஆஷாவுக்கு வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உதவிக்கு யாருமில்லாமல் அவர் தவித்து நிற்க எம்.பி. ஸ்மிருதி இரானி அவருக்கு உதவி செய்திருக்கிறார்.
இது குறித்து ஆஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "பிரதமரின் பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அப்போது ஸ்மிருதி இரானிதான் எனக்கு உதவினார். நான் பத்திரமாக வீடு திரும்பினேன். இந்த அக்கறைதான் அவருக்கு அமேதியில் வெற்றியைத் தந்துள்ளது" என்றார்.
உத்தரப் பிரதேச மாநில அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.