நாடே எதிர்பார்த்த கன்னையாகுமாருக்கு பேகுசராயில் படுதோல்வி

நாடே எதிர்பார்த்த கன்னையாகுமாருக்கு பேகுசராயில் படுதோல்வி
Updated on
1 min read

வெற்றி பெறுவார் என நாடு முழுவதிலும் எதிர்பார்த்த கன்னைய்யா குமாருக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இங்கு அவரை எதிர்த்து போட்டியிட அஞ்சியதாகக் கருதப்பட்ட மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் 6,87,577 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

பிஹாரின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள பேகுசராய் இந்ததேர்தலில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்கு அங்கு போட்டியிட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் கன்னைய்யாகுமார் காரணம்.

தம் பல்கலையில் கன்னைய்யா நடத்திய போராட்டத்தில் தேசவிரோத கோஷங்கள் இட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அந்த வழக்கில் ஜாமீன் பெற்று தேர்தலில் போட்டியிட்டார்.

தொடர்ந்து கன்னைய்யா, பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவிற்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார். கன்னைய்யாவின் சொந்த ஊர் என்பதால் அவரது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பேகுசராயில் அவரை வேட்பாளராக்கியது.

இதன் அருகிலுள்ள நவாதாவின் பாஜக எம்பியான கிரிராஜை அவரது கட்சி பேகுசராயில் போட்டியிட வைத்தது. இதனால், தன் கட்சி மற்றும் அதன் பிஹார் தலைவர்கள் மீது அதிருப்திக்குள்ளான கிரிராஜ் கண்டன அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இத்துடன் தாம் பேகுசராயில் போட்டியிடப் போவதில்லை எனவும் மறுத்திருந்தார். அதேபோல், துவக்கத்தில் கன்னைய்யாவிற்கு ஆதரவளித்த லாலு பிரசாத் யாதவ், தன் மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவால் எதிர்க்க வேண்டியதாயிற்று.

தனக்கு நிகரான தலைவராக கன்னைய்யா வளர்ந்து விடக்கூடாது என தேஜஸ்வி வலியுறுத்தியதால் முகம்மது தன்வீர் ஹசன் என்பவர் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் நிறுத்தப்பட்டார்.

பேகுசராயை சேர்ந்த கன்னைய்யாவின் வெற்றிக்காக பல்வேறு கட்சிகளும் ஆதரவளித்து பிரச்சாரம் செய்தனர். லாலுவின் மெகா கூட்டணியில் அமைந்திருந்தாலும் காங்கிரஸும் கன்னைய்யாவிற்கே ஆதரவளித்திருந்தது.

இக்கட்சியின் குஜராத் தலைவரான ஹர்திக் பட்டேல், அம்மாநில வடகம் தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டப் பலரும் பிரச்சாரம் செய்திருந்தனர்.

 எனினும், முடிவுகளுக்கு முன்னதாகவே பேகுசராயில் கன்னைய்யாவின் வெற்றி உறுதி என பலரும் கருதினர். பெரும்பாலான ஊடகங்களும் கிரிராஜுக்கு தோல்வியே என எழுதினர்.

இந்த அனைத்து நம்பிக்கைகளையும் சிதறடிக்கும் வகையில் கன்னைய்யா பேகுசராயில் சுமார் 4,19,660 வாக்குகளுடன் கிரிராஜிடம் தோல்வி அடைந்துள்ளார். கன்னைய்யாவை விட சுமார் 71,117 வாக்குகள் குறைவாக தன்வீருக்கு கிடைத்துள்ளது.

மதவாதத்தை ஆதரிக்கும் வகையில் சர்ச்சையான பேச்சுக்களுக்கு பெயர் போன கிரிராஜுக்கு பேகுசராயில் இது எதிர்பாராத வெற்றியானது. இதனால், அவர் பிஹாரில் பாஜகவின் நட்சத்திர வெற்றியாளராக மாறி விட்டார்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் கன்னைய்யாவிற்கு 21.97, கிரிராஜுக்கு 56.15 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. பேகுசராயின் யாதவர் மற்றும் முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததுடன், நோட்டாவிலும் சுமார் 18,000 வாக்குகள் போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in