

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்துள்ள மிகப்பெரிய தோல்வியில் இருந்தும், இக்கட்டில் இருந்தும் மீட்டு வருவதற்கு ராகுல் காந்திதான் சிறந்தவர் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுவரும்போது, இப்போதே இரங்கற்பா எழுதக்கூடாது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்த முறையும் மோசமாக செயல்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 52 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தொடர்ந்து 2-வது முறையாக இழந்துவிட்டது.
இதையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்த ராஜினாமாவை ஏற்க செயற்குழு உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.
ஆனால், தனது முடிவில் விடாப்படியாக இருக்கும் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது தார்மீக பொறுப்பு என்று கூறி ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். தனது நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு மூன்றுமுறை எம்.பி.யாக வெற்றி பெற்ற சசி தரூர் கட்சியின் சூழல் குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய நம்பிக்கையான, மாற்றுக்கட்சி காங்கிரஸ் மட்டுமே இருக்கிறது. நிச்சயம் தேசத்துக்கு நல்ல செய்தியை ராகுல் காந்தி தலைமையில் எடுத்துச் சொல்லும்.
நேரு-காந்தி குடும்பம் கட்சிக்குள் நல்ல மதிப்புடன், செல்வாக்குடன், மாண்புடன் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கிறார்கள். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கட்சியை வழிநடத்தியதிலும், கட்டமைத்ததிலும் அவர்களின் குடும்பத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.
அப்படி இருக்கையில், ராகுல் காந்தி ராஜினாமா முடிவை எடுக்கக்கூடாது. அவர்தான் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும், கட்சியை வெகுதொலைவு அவர் கொண்டு செல்ல வேண்டியது இருக்கிறது.
ஆனால், தேர்தல் தோல்விக்கு மிகச் சுலமாக ராகுல் காந்தி ஒருவர் மீது மட்டும் பழியை ஊடங்கங்கள் சுமத்துவது நியாயமில்லாதது. இருந்தபோதிலும், ராகுல்காந்தி துணிச்சலாக தோல்விக்கு தானே பொறுப்பு என ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், தோல்விக்கு ஒருவரை மட்டும் பொறுப்பேற்க விடாமல், நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். கட்சி தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க, அரசியலில் ஆக்கப்பூர்வமாக செயல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
கட்சி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் எப்போது தேர்தல் நடத்தினாலும் எந்தவிதமான வேட்பாளரையும் ராகுல் காந்தியால் எளிதாக, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தலைவராக வர முடியும்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நேரு-காந்தி குடும்பத்தைத் தவிர்த்து மற்றவர்கள் தலைவர்களாக வந்திருக்கிறார்கள், பிரதமர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள்.
கட்சிக்குள் நேரு-காந்தி குடும்பத்துக்கு மிகப்பெரிய செல்வாக்கும், மரியாதையும் இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
கட்சிக்காக ஏராளமான தியாகங்களை நேருகுடும்பம் செய்துள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என இரு பிரதமர்கள் தங்கள் உயிரை தேசத்துக்காக தியாகம் செய்துள்ளார்கள்.
பாஜகவுக்கு மாற்றாக இன்னும் நம்பகத்தன்மையுள்ள கட்சியாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இப்போதே இரங்கற்பா எழுதுவதும் முன்முடிவுக்கும் வரக்கூடாது. கேரளாவிலும், பஞ்சாப்பிலும் காங்கிரஸ் கட்சி இன்னும் உயிருடன் இருந்து வருகிறது, அதற்கான சாட்சியையும் பார்த்துவிட்டீர்கள்.
இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு ஏற்பட்ட காயங்களை, நாக்கால் நக்கி மெதுவாக ஆற்றிக்கொள்ள நேரமில்லை. அடுத்த சில மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகவேண்டும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக என்னை நியமித்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறேன். ஏராளமான பெருந்தலைவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதனால் நானும் தயாராக இருக்கிறேன்.
இந்த தேர்தலில் வகுப்புவாதம், பிரிவினை என்பது இருந்தது என்பதை மறுக்க இயலாது. தேசத்தில் பொருளாதர பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினைகள், சிறுதொழில், குறுந்தொழிலில் சிக்கல்கள் போன்றவை இருந்தபோதிலும் மக்கள் ஏன் அதைமறந்து பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை கட்சி புரிந்துகொண்டது. சந்தேகமில்லாமல், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தியதே காரணம்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.