ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள்: மத்தியப் பிரதேச தலைமைக் கணக்காளர் அறிக்கையில் தகவல்

ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள்: மத்தியப் பிரதேச தலைமைக் கணக்காளர் அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கான வைஃபை தொழில்நுட்ப வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாக மத்தியப் பிரதேச தலைமைக் கணக்காளர் தணிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் என்பது முக்கியத் தரவுகளையும் தகவல்களையும் கொண்டதாகும், அதன் வைஃபை ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் தரவுகளின் ரகசியத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை குறித்த ஐயங்களை தலைமைக் கணக்காளர் தன் அறிக்கையில் எழுப்பியுள்ளார்.

இதற்கான அனுமதி வழங்கியதில் துறைத்தலைமையின் ஓப்புதல் பெறப்படவில்லை என்று ஆடிட் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

இந்த ஆடிட் அக்டோபர் 2017 , டிசம்பர் 2018 இடையே நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலகம் என்பது அரசமைப்பு சார்ந்த அமைப்பாகும், தனியார் நிறுவனத்துக்கு இந்த சேவையை வழங்கியதன் மூலம் தரவுகளுக்கு என்ன பாதுகாப்பு என்று கேட்டு தலைமைத் தேர்தல் அலுவலகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது தவிர இன்னும் சில முறைகேடுகளையும் இந்த ஆடிட் அறிக்கை கூறியுள்ளது.  வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்களிக்கும் இடத்துக்கான தடுப்புகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்துவதில் செலவினத்திற்கான ஒழுங்கான தர்க்கம் எதுவும் இல்லை.  வாக்குச்சாவடிகளில் இந்த தடுப்பு, மறைப்பு அமைப்புகளை ஃபிளெக்ஸ் போர்டுகளில்தான் வைக்க வேண்டும் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலாகும். அவ்வகைத் தடுப்புகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பாதுகாப்பு, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அவை முழுத்தடுப்பாக இருக்க வேண்டும் என்பவை சிலபல விதிமுறைகளாகும். ஆனால் ம.பி.யில் இந்த குறிப்பு அறிவுறுத்தல்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்கிறது தலைமைக் கணக்காளர் அறிக்கை.

மேலும் அச்சடிப்பு செலவாக ரூ.18 லட்சம் ஆகியுள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டிய செலவு என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது பயிற்சிக்கான பொருட்கள் வாங்குவதில் ரூ.50 லட்சம் செலவு காட்டியதிலும் முறைகேடுகள் இருப்பதாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தச் சட்டப்பேரவைத் தேர்தலின் போது ம.பி. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் கொடுக்கப்பட்டதற்கான பயன்பாட்டுச் சான்றிதழும் வரப்பெற்றிருக்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in