மோடியை மோசமாக விமர்சித்ததால் காலணியை வீசினேன்: சித்துவை தாக்க முயன்ற பெண் போலீஸில் வாக்குமூலம்

மோடியை மோசமாக விமர்சித்ததால் காலணியை வீசினேன்: சித்துவை தாக்க முயன்ற பெண் போலீஸில் வாக்குமூலம்
Updated on
1 min read

பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து மீது காலணியை வீசி எறிந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஹரியாணா மாநிலம் ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து  சித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவர் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

திடீரென்று அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது. நடப்பதை சுதாரிப்பதற்குள் அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென சித்துவை நோக்கி காலணியை வீசினார். காலணி சித்து மீது விழவில்லை. ஆனாலும் போலீஸார் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையின்போது அந்தப் பெண், சித்து தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாகப் பேசி வருகிறார். அதனாலேயே அவர் மீது காலணியை வீசி எறிந்தேன் எனக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் குதித்தவர் சித்து. அவர் மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, அவருடன் வந்த வாகனங்கள் மீது தக்காளிகளை வீசி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சியினர் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்வதும் அதற்கு தொண்டர்கள் ஆவேசப்பட்டு இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.

கடந்த மாதம் (ஏப்ரல்) பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது. சாத்வி பிரக்யாவை போபால் வேட்பாளராக களமிறக்குவது குறித்து கட்சி பரிசீலித்து வருவதாக அவர் கூறியபோது ஷூ வீசப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியை 'திருடன்' எனக் கூறியதோடு உச்ச நீதிமன்றத்தையும் தொடர்புபடுத்தி பேசியதாக எழுந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in