Last Updated : 06 May, 2019 02:54 PM

 

Published : 06 May 2019 02:54 PM
Last Updated : 06 May 2019 02:54 PM

தலைமை நீதிபதிக்கு எதிராக சதி: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராகத் திட்டமிட்டு போலியாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர்  கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ். அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் எம்.எல்.சர்மா, "வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்" என்றார். அதற்கு நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, "என்ன அவசரம், நீங்கள்தான் மனுத்தாக்கல் செய்துவிட்டீர்களே. அது விரைவில் விசாரணைக்கு வரும். தகுந்த நேரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்" என்றனர்.

அதற்கு வழக்கறிஞர் சர்மா கூறுகையில், "என்னுடைய மனு வரும் 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. நான் அவசர வழக்காக எடுக்க வலியுறுத்தவில்லை" என்றார்.

வழக்கறிஞர் சர்மா தனது மனுவில், "உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது. அவரின் மீது பொய்யாக பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவ செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாகிய சில மூத்த வழக்கறிஞர்களும் சேர்ந்து திட்டமிட்டு, தலைமை நீதிபதிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, தலைமை நீதிபதிக்கு எதிராக திட்டமிட்ட சதி மற்றும் அவரையும், மற்ற நீதிபதிகளையும் கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியாகும். இது தீவிரமான மோசடி, ஏமாற்றுத்தனம். தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்றம் மீது பொய்யான கிரிமினல் தாக்குதல் நடத்தப்படுகிறது. நான் குறிப்பிட்டுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் மீதும், அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் மீதும் சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்து, கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து விசாரணையைத் தொடங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் சர்மா தனது மனுவில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன், காமினி ஜெய்ஷ்வால், விரிந்தா குரோவர், இந்திரா ஜெய்சிங், நினா குப்தா பாசின், துஷ்யந்த் தவே ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x