

மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50 பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் தங்குவதற்கான வசதிகளை பாஜகவே செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தைக் காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசியல் வன்முறையில் உயிரிழந்த பாஜக தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர். இதற்கான முடிவு, நேற்று இரவு பிரதமரின் இல்லத்தில் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவருக்கும் இடையில் நடைபெற்ற 5 மணி நேரப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் கூறும்போது, ''கடந்த 6 ஆண்டுகளில் பஞ்சாயத்து தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின்போது பாஜகவினர் மீது வன்முறை ஏவப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், சுமார் 7,000 விருந்தினர்களுக்கு மத்தியில் பாஜக தியாகிகளின் குடும்பங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட வன்முறை சம்பவங்களுக்கு எதிராக மத்திய அரசும் கட்சிக்குத் துணை நிற்கும் என்பதை இது தெளிவாகக் காட்டும். இது மேற்கு வங்கத்தில் 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டம்தான்'' என்றனர்.
முன்னதாக மே 23 அன்று மக்களவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து, வெற்றிக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, தாக்குதலில் உயிரிழந்த மேற்கு வங்கத் தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே அம்மாநிலத்தில் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே தொடர்ந்து அடிதடி மோதல்கள் நடந்தன. பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்த பாஜக மேற்கொண்டுள்ள முதல்கட்ட நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.
2014-ல் அம்மாநிலத்தின் 42 தொகுதிகளில் 2-ஐ மட்டுமே பெற்றிருந்த பாஜக, 2019-ல் 18 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.