சூரத் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 21 மாணவர்கள் பலி; பிரதமர் மோடி இரங்கல்

சூரத் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 21 மாணவர்கள் பலி; பிரதமர் மோடி இரங்கல்
Updated on
1 min read

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்திற்கு 21 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மாணவர்கள் ட்யூஷன் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த போது இந்தப் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசிய அதிகாரி ஒருவர், “3 மற்றும் 4வது மாடிகளில் சுமார் 10 மாணவர்கள் சிக்கியிருந்தனர். தீயிலிருந்து தப்பிக்க அந்த மாடிகளிலிருந்து அவர்கள் கீழே குதித்துள்ளனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன” என்றார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறும்போது, சூரத் மருத்துவமனையில் 16 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அதிர்ச்சி வெளியிட்டதோடு இழப்படைந்த குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக தொண்டர்கள் களத்தில் இறங்கி உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷார்ட் சர்க்யூட்டினால் இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  டியூஷன் வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

இந்தக் கட்டிடத்தில் தீ ஏற்பட்டால் பாதுகாப்பதற்கான எந்த வசதியும் இல்லை என்று தெரிகிறது. இதனையடுத்து முதல்வர் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இந்த விபத்துக் குறித்து அதிர்ச்சி வெளியிட்டதோடு, உடனடியாக தக்க உதவி ஏற்பாடுகளைக் கவனிக்க அதிகாரிகளுக்கும் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில்  காட்டப்பட்ட பதிவுகளில் பல மாணவர்கள் மேலிருந்து கீழே குதித்திருப்பது தெரியவந்தது. 19 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  மொத்தம் 19 பேர் பலியானதாக சில தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் வயது 14 முதல் 17 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in