பிரதமர் மோடிக்கு நற்சான்று: எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையரின் கருத்துகளைப் புகார்தாரர் அறிய முடியுமா?

பிரதமர் மோடிக்கு நற்சான்று: எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையரின் கருத்துகளைப் புகார்தாரர் அறிய முடியுமா?

Published on

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிப் பேசவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அந்த உத்தரவு தேர்தல் ஆணையம் ஒருமனதாக பிறப்பித்ததா அல்லது பெரும்பான்மை ஆணையர்களின் முடிவின்படி பிறப்பிக்கப்பட்டதா என்பதைப் புகார்தாரர் அறிய உரிமை உண்டு என்று முன்னாள் தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், ராணுவத்தினரை சுட்டிக்காட்டியும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் எம்.பி.சுஷ்மிதா தேவ் 11 புகார்களைத் தெரிவித்திருந்தார்.

வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 1-ம் தேதி மகாராஷ்டிராவின் வார்தாவில் பேசிய பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று அளித்தது. மேலும், புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து 9-ம் தேதி மோடி  பேசிய பேச்சிலும் தவறில்லை என்று தேர்தல் ஆணையம் நற்சான்று அளித்தது.

இதேபோல, அமித் ஷா பேசிய பேச்சிலும் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 7 மனுக்கள் மீது தீர்வு கண்ட தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா பேசியதில் தவறில்லை எனத் தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் 3 பேரில் ஒருவர் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுக்கு நற்சான்று அளித்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரு ஆணையர்கள் மட்டும் ஒப்புதல் அளித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஆதாரங்களைத் தாக்கல் செய்யக் கோரி உச்ச நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது குறித்து புகார்தாரர் அறிய முடியுமா என்பது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர்களிடம் கருத்துகேட்கப்பட்டது. அதில் ஒருவர் கூறுகையில், "தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா அல்லது பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த முடிவை தேர்தல் ஆணையச் செயலாளர்தான் புகார்தாரருக்குத் தெரிவிப்பார்.

ஆனால், அந்தத் தகவலில், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதா அல்லது பெரும்பான்மை கொண்ட உறுப்பினர்களால் எடுக்கப்பட்டதா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையரின் கருத்துகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

மற்றொரு ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் கூறுகையில், "புகார்தாரர் தனது மனுவுக்கு யார் ஆதரவு தெரிவித்தது, யார் எதிர்ப்பு தெரிவித்தது என்பதை அறிய உரிமை உண்டு. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், எதிர்ப்பு தெரிவித்த அந்தத் தேர்தல் ஆணையர் தனது கருத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எதிர்ப்பு என்பது ஆலோசனைக்குப் பின் எடுக்கப்படுவது. ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதி" எனத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையச் சட்டம் 1991-ன்படி, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகாரை ஆய்வு செய்யும்போது, தேர்தல் ஆணையர்களில் 3 பேரில் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் பெரும்பான்மை ஆணையர்கள் எடுக்கும் முடிவே சரியானதாக எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in