

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயலில் வீடிழந்த குடும்பம் கழிவறையில் வாழ்ந்த அவலம் ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம் கேந்தரப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரோட் ஜெனா. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். ஃபானி புயலில் இவர் வீடிழந்தார்.
இதற்கிடையில், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இவருக்கு 7-க்கு 6 அடியில் கழிவறை ஒதுக்கப்பட்டிருந்தது. புயலில் வீட்டை இழந்து நின்ற ஜெனா மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அந்த கழிவறையில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இது குறித்து அவர், "ஃபானி புயல் எனது வீட்டை சேதப்படுத்திவிட்டது. ஆனால், கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்ட இந்த கழிவறை மட்டும் தப்பித்து கொண்டது. புயலுக்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் எனக்கு இந்த கழிவறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவே இப்போது எங்களுக்கு வசிப்பிடமாகிவிட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு நாங்கள் இங்கேயே தங்கியிருக்க நேரும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
இந்தப் புயல் எங்கள் வாழ்வை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. வீட்டை சீரமைக்க எந்த நிதியும் இல்லை. புயல் நிவாரண நிதி ஏதாவது வழங்கப்படுமா என காத்திருக்கிறேன்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுக்கடனுக்காக விண்ணப்பித்துள்ளேன். பிஜூ பக்கா வீட்டு திட்டத்தின் கீழும் விண்ணப்பித்துள்ளேன்" என்றார்.
இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் திலீப் குமார் பரிடா, "ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று கழிவறையில் வசித்து வருவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. நாங்களும் விசாரித்தோம். அந்த நபருக்கு வீட்டுக் கடன், புயல் நிவாரண நிதி என எல்லா உதவிகளையும் விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.