Last Updated : 03 May, 2019 07:46 AM

 

Published : 03 May 2019 07:46 AM
Last Updated : 03 May 2019 07:46 AM

காங்கிரஸ் - பாஜக உடன்பாடு மாயாவதி குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – பாஜக இடையே ரகசிய உடன்பாடு உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மாயாவதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் பிரச்சினையில்லை, ஆனால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறக் கூடாது என காங்கிரஸ் நினைக்கிறது. பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சியும் எங்களுக்கு எதிராக அபத்தமான விஷயங்களை பேசத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் – பாஜக இடையே ரகசிய உடன்பாடு இருப்பது தெளிவாகிறது. இரு கட்சிகளும் எங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிடுகின்றனர். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக சில கருத்துகளை பிரதமர் மோடி கூறியுள்ளார். அம்பேத்கர் பெயரை பாஜகவினர் வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்தலாம். ஆனால் அம்பேத்கர் எங்கள் கட்சியின் ஆன்மாவாக விளங்குகிறார். கடவுள் ராமர் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் அரசியலில் எங்கள் கட்சி ஈடுபடாது. காங்கிரஸ் கட்சியை போல, போலி அம்பேத்கர்வாதியாக மாற முயற்சிக்க வேண்டாம் என  பாஜகவை கேட்டுக்கொள்கிறேன்.

உ.பி.யில் பாஜக பலன் அடையும் வகையில் எங்கள் கூட்டணிக்கு எதிராக சாதி மற்றும் வெறுப்புணர்வு அரசியலின் அடிப்படையில் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

சாதியவாதம், மதவாதம் மற்றும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வருவதை காங்கிரஸும் பாஜகவும் விரும்பவில்லை. இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். 

இவ்வாறு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x