Last Updated : 26 May, 2019 12:00 AM

 

Published : 26 May 2019 12:00 AM
Last Updated : 26 May 2019 12:00 AM

மேற்குவங்கத்தில் மம்தா தோல்விக்கு பல காரணங்கள்: பாஜகவுக்கு வேலை பார்த்த திரிணமூல், இடதுசாரிகள்

மேற்குவங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது சொந்தக் கட்சி தொண்டர்களும் இடதுசாரிகளும் வாக்களித்துள்ளனர். அதுமட்டுமன்றி மம்தாவின் சரிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) 34 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 4, பாஜக மற்றும் இடதுசாரிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால், இந்தத் தேர்தலில் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.

இந்தத் தேர்தலில் மேற்குவங்கத்தில் மோடி அலை மற்றும் மம்தா மீதான கோபம் உட்பட பல காரணங்களால் திரிணமூல் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. அப்போது சிறுபான்மையினத்தவர்களுக்கு ஆதரவாக மம்தா செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே திரிணமூல் காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் அதிகரித்துவிட்டது. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அது ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎம்சி உள்ளூர் தலைவர்கள் கூறும்போது, ‘‘கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தொலைநோக்கு பார்வையின்றி, கர்வமுடன் செயல்பட்டனர். அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணமாகிவிட்டது’’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திரிணமூல் கட்சியின் வாக்குச் சதவீதம் 43 சதவீதமாக அதிகரித்தாலும், வெற்றி பெற்ற இடங்கள் 34-ல் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது. அதற்கு திரிணமூல் தொண்டர்களும் இடதுசாரி தொண்டர்களும் கணிசமாக பாஜக.வுக்கு வாக்களித்துதான் காரணம் என்கின்றனர்.

குறிப்பாக தெற்கு வங்கத்தில் பழங்குடியினத்தவர்கள் நிறைந்த ஜங்கல்மகால் பகுதி, பழங்குடியினத்தவர்கள் நிறைந்த வடக்கு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் அதிக செல்வாக்குடன் இருந்தது. ஆனால், அந்தப் பகுதி வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொள்ள திரிணமூல் தவறிவிட்டது.

ஆனால், பிரதமர் மோடியின் திட்டமிட்ட பிரச்சாரங்கள், அமித் ஷாவின் திட்டங்கள் எல்லாம் பாஜக.வுக்கு ஆதரவாக மாறின. அதற்கு பலனாக கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. அத்துடன் மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில் வெறும் 17 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 40.5 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டது.

இதில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பல தொகுதிகளில், பாஜக 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்குவங்கத்தில் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் உட்பட இடதுசாரிகள் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டன.

திரிணமூல் 22 தொகுதிகளை கைப்பற்றினாலும், அவற்றில் 16 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி சுற்று வரை இழுபறிதான் நீடித்தது. இதனால் டிஎம்சி தலைவர்கள் மிகவும் பதற்றத்துடனே இருந்தனர்.

மேற்குவங்கத்தில் பாஜக எழுச்சி தேர்தலில் எதிரொலித்தாலும், அது தற்காலிகமானதுதான் என்று திரிணமூல் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். ஆனால், கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலர், பாஜக.வின் எழுச்சியால் மாநிலத்தில் திரிணமூல் ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்படுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து மம்தா பானர்ஜி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதும் பலருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத டிஎம்சி மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘தேர்தல் நிலவரத்தை சரியாகக் கணிக்க தவறிவிட்டோம். உண்மையில் முன்னால் என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் வரை டிஎம்சி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது கடும் சவால்தான்’’ என்று தெரிவித்தார்.

ஏனெனில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை, சட்டப்பேரவை வாரியாகப் பார்க்கும் போது, பாஜக.வின் வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவை. சட்டப்பேரவை வாரியாக வாக்கு எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 130 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. எனவே, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் தங்களுடைய பலத்தை பாஜக இன்னும் அதிகரித்துக் கொள்ளும். எனவே, கட்சித் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வது மம்தாவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர்.

இதுகுறித்து டிஎம்சி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது பெரும் வன்முறை ஏற்பட்டது. அப்போது வாக்களிக்க மக்கள் வெளியில் வரவில்லை. அதனால் டிஎம்சி மீது அதிருப்தி அதிகரித்துவிட்டது. மேலும் உள்ளூர் டிஎம்சி தலைவர்கள் பலர் ஊழலில் திளைக்கின்றனர். சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த மம்தா எடுத்த நடவடிக்கைகளும் பாதகமாக முடிந்தது’’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் தேசியப் பற்று, இந்துத்துவா கொள்கைகளை முன்னிலைப்படுத்தி பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது. அத்துடன், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை இனம்கண்டு வெளியேற்றுவோம் என்று பாஜக உறுதி அளித்தது. மேற்குவங்கத்தில் துர்கா பூஜையைத் தடுக்க மம்தா முயற்சிக்கிறார் என்று பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தை விரிவாக்கினர்.

அவற்றுக்குப் பதிலடிக் கொடுக்கும் விஷயத்தில் திரிணமூல் தோல்வி அடைந்துவிட்டது. அதுமட்டுமல்ல மாநிலத்தில் 27 சதவீத முஸ்லிம் வாக்குகள் உள்ளன. அவர்களைக் காக்கும் ரட்சகனாக திரிணமூல் கட்சி தன்னை காட்டிக் கொண்டது. அதனால் பெரும்பான்மை இந்துக்களின் முழு கோபமும் திரிணமூல் காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டது. அதனால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்று டிஎம்சி மூத்த தலைவர் ஒருவர் காரணங்களை அடுக்கி வைக்கிறார்.

மேலும், முதல்வர் மம்தா பானர்ஜி காரில் செல்லும் போது, இளைஞர்கள் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். அதில் கோபம் அடைந்த மம்தா, காரை நிறுத்திவிட்டு இளைஞர்களை விரட்டி சென்று கோபமாக பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, இந்துக்களின் கோபத்துக்கு மம்தா ஆளானார். அதையும் தங்களுடைய பிரச்சாரத்தில் தெளிவாக பாஜக பயன்படுத்திக் கொண்டது.

கட்சிக்குள் கோஷ்டி மோதல் அதிகரித்ததால், டிஎம்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதனால், தங்கள் கட்சித் தலைவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டு பாஜக.வுக்கு வாக்களித்துவிட்டனர்.

இதுபோன்று மேற்குவங்கத்தில் மம்தாவின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து கட்சியைப் பலப்படுத்தி மேற்குவங்கத்தில் தாமரையை மலர செய்ததில் பாஜக மூத்த தலைவர் முகுல் ராய்க்கு பெரும் பங்கு உண்டு. இவர் திரிணமூல் கட்சியில் செல்வாக்குடன் இருந்தவர்தான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, ரயில்வே இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாஜக.வில் இணைந்தவர். முகுல்ராய் கூறும்போது, ‘‘இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக.வின் வெற்றி எதிர்பார்த்ததுதான்’’ என்று சாதாரணமாகச் சொல்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘மேற்குவங்கத்தில் பல இடங்களில் டிஎம்சி தொண்டர்கள், தலைவர்கள் பலர் பாஜக.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். டிஎம்சி தலைவர்கள் பலர் பாஜக.வுக்காக தேர்தல் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரையும் பாஜக.வுக்கு அழைத்துவர வேண்டிய நேரம் இது. அதன்மூலம் சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதிக்கட்ட போருக்கு தயாராக வேண்டும்’’ என்கிறார்.

திரிணமூல் போலவே இடதுசாரி தொண்டர்கள், தலைவர்கள் பலரும் பாஜக.வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 29 சதவீத வாக்குகள் பெற்றன. இந்தத் தேர்தலில் அந்த வாக்கு சதவீதம் 7 ஆக குறைந்துவிட்டது. மீதமுள்ள வாக்குகள் அனைத்தும் பாஜக.வுக்குதான் சென்றன என்று புள்ளிவிவரத்துடன் உறுதியாகக் கூறுகின்றனர்.

மாநிலத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்த பாஜக.வைத்தான் தேர்ந்தெடுத்தோம் என்று இடதுசாரி மூத்த தலைவர்கள் பலர் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ.க்களை திரிணமூல் கட்சி திட்டமிட்டு தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. ‘எதிர்க்கட்சிகள் இல்லாத மேற்கு வங்கம்’ என்ற திட்டத்துடன் மம்தா செயல்படுகிறார். அதற்கு பழிவாங்கும் வகையில், இந்தத் தேர்தலில் பாஜக.வுக்கு ஆதரவாக இடதுசாரிகள் வாக்களித்ததாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் 2021-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் அடுத்த ஆண்டு நகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கட்சியை சிதையாமல் கட்டிக் காப்பது மம்தாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x