

டெல்லி காந்தி நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் பாஜ்பாய் இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் 14 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் விஜய் கோயல் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயலுவதாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘வளர்ச்சி அரசியல் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் அவர் செய்வது வளர்ச்சி அரசியல் அல்ல. மற்ற கட்சிகளை உடைக்கும் செயலில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி 7 எம்எல்ஏக்களை தலா 10 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருகிறது’’ எனக் கூறி இருந்தார். ஆனால் சிசோடியாவின் குற்றச்சாட்டை பாஜக மறுத்தது.
இந்தநிலையில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த டெல்லி காந்தி நகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘ஆம் ஆத்மி கட்சியில் எங்களுக்கு உரிய மரியாதை இல்லை. பல ஆண்டுகளாக உழைத்தவர்களை கட்சி புறக்கணிக்கிறது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்’’ எனக் கூறினார்.
இதுகுறித்த விஜய் கோயல் கூறுகையில் ‘‘பணம் கொடுத்து 7 எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயலுவதாக கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா கூறுவது தவறானது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கட்சி தலைமையின் தவறான நடவடிக்கையால் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். 7 எம்எல்ஏக்கள் அல்ல 14 எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்’’ எனக் கூறினார்.