

மாற்றந்தாய் மனப்போக்குடன் தென் இந்தியா மத்திய அரசால் நடத்தப்படுவதால், மக்களவைத் தேர்தலில் மோடியைத் தோற்கடிப்பதில், தென் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், 3-வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சசி தரூர் இன்று பிடிஐ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களும், அனைத்து தரப்பு மக்களும் தேவை என்று நினைக்கிறது. சரிசமமான முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறது. அதனால்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தென்னிந்திய மாநிலங்களின் நலன்கள், கவலைகள் புறந்தள்ளப்படாது.
நாட்டின் தலையெழுத்தை இந்தத் தேர்தலில் முடிவு செய்வதில் தென்னிந்தியா முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும். குறிப்பாக, பிரதமர் மோடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்கு வகிக்கும். மத்திய அரசால் தொடர்ந்து தென் மாநிலங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தேசத்தில் பரவலான அளவில் கூட்டுறவு கூட்டாட்சியின் பற்று மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாட்டிறைச்சி விற்பனை செய்யவும், உண்ணவும் தடை விதிப்பது, இந்தி மொழியை மாநிலங்கள் மீது திணிப்பது, 15 நிதி ஆணையத்தின் மூலம் தென் மாநிலங்களின் அரசியல் பாதுகாப்பு, நிதிப் பாதுகாப்பு பறிப்பு போன்றவை பாஜக ஆட்சியில் நடந்தன.
கேரளாவில் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். தென் மாநிலங்கள் மட்டுமின்றி, தேசத்தின் பெரும்பகுதியிலும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பரவலாகியுள்ளது. தற்போது நடக்கும் ஆட்சியை அகற்றிவிட்டு நம்பகமான ஆட்சியைக் கொடுக்க காங்கிரஸால்தான் முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்
கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவுக்கு 282 இடங்கள் கிடைத்தன. அதில் உள்ள எளிமையான கணக்கு என்னவென்றால், செயல்திறன் மீண்டும் திரும்பாது என்பதுதான். மக்களுக்கு மிகப்பெரிய திட்டங்களைச் செய்திருந்தால்கூட 2-வது முறையாக மக்கள் எளிதாக வாக்களிக்க மாட்டார்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் கையைச் சுட்டுக்கொண்டுள்ளன. பாஜவில் இருந்து விலகிச் செல்ல பெரும்பாலான கட்சிகள் தயாராக இருக்கிறார்கள்''.
இவ்வாறு சசி தரூர் பேசினார்.