

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புல்வாமா மாவட்டம், தெலிபோராவில் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை ராணுவத்தின் 55 ராஷ்ட்ரிய ரைஃபில் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர், இதற்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பும் நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், ராணுவ வீரர் இருவருக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. இதில் ஒரு வீரர் மரணம் அடைந்தார். மற்றொரு காயமடைந்த ராணுவ வீரர் விமானம் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் ஒருவரும் காயமடைந்தார். அவரை உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த என்கவுன்ட்டரைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் அனைத்தையும் ராணுவத்தினர் முடக்கி வைத்துள்ளனர். தொடர்ந்து தேடுதல்வேட்டை நடந்துவருவதால் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில்மட்டும் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 82 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 272 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின், 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.