

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மராது நகராட்சிப் பகுதியில் கடற்கரை கட்டுப்பாட்டு மண்டல விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட 5 அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்தக் கட்டிடங்களை ஒருமாதக் காலத்திற்குள் இடித்து நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெருமழையும் கடும் வெள்ளமும் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாநிலம் சட்டவிரோத கட்டிடங்களை அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
பஞ்சாயத்து கொடுத்த அனுமதி:
மராது பஞ்சாயத்தாக இருந்த போது 2006ம் ஆண்டு இந்த கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த அடுக்குமாடிக் கட்டிடங்கல் சிஆர்இசட்-2 அல்லது சி ஆர் இஸட் -3-ன் கீழ் வருகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்த நிபுணர்கள் குழு தன் அறிக்கையில் சி.ஆர்.இசட் -3-ன் கீழ் வரும் பகுதிகளில் கடற்கரையிலிருந்து 200மீ தொலைவுக்கு எந்த ஒரு கட்டிடத்துக்கும் அனுமதி இல்லை என்று கூறியிருந்தது. “குறிப்பிட்ட இந்தக் கட்டிடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியில் இருப்பதால் கட்டுமானங்கள் சட்ட விரோதம்” என்று அறிக்கை தெரிவித்தது.
கேரளா கடற்கடை மண்டல மேலாண்மை ஆணையம் மூலம் ஒப்புதல் பெறாமலேயே மராது பஞ்சாயத்து இந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சிஆர்இசட் பகுதியில் கட்டிடம் கட்ட மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறுவது அவசியம்.
கட்டுமான நிறுவனங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் வி.கிரி சிஆர்இஸட் 2011 அறிவிக்கையின் படி இது சி.ஆர்.இஸட்-2ன் கீழ்தான் வருகிறது. ஆகவே கட்டுமானம் சட்டவிரோதம் அல்ல என்று வாதாடினார்.
ஆனால் இதனை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முறியடித்து 1991ம் ஆண்டு சிஆர்இஸட் அறிவிக்கையின் படி கட்டிடம் கட்டப்பட்ட பகுதி சிஆர்இஸட்-3 இன் கீழ்தான் வரும் என்று நிறுவ இதனை ஏற்ற நீதிபதிகள் விதிமீறல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயற்கைப் பேரழிவுகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறி இடிக்க உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஹோலி ஃபெய்த் அபார்ட்மெண்ட்ஸ், கயலோரம் அபார்ட்மெண்ட்ஸ், ஹாலிடே ஹெரிடேஜ், ஆல்ஃபா வென்ச்சர்ஸ், மற்றும் ஜெயின் ஹெரிடேஜ் ஆகிய குடியிருப்புக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. ஆனால் சீராய்வு மனு செய்வோம் என்று கட்டுமான அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
மராது முனிசிபாலிட்டியின் கீழ் வரும் சுமார் 320 வீடுகள் இதனையடுத்து சிக்கலுக்குள்ளாகியுள்ளன.