

ஃபானி புயலுக்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் இழப்புகள் குறைந்தன என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களை ஃபானி புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கியது. கடந்த 43 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் உருவானதில் மிகவும் வலிமையான புயல் இதுவாகும். 1999-ம் ஆண்டுக்குப் பின் உருவான சூப்பர் புயல்களில் மிகவும் வலிமையானது ஃபானி புயல்.
புயல் கடந்து சென்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதி முழுவதுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதமடைந்தன. ஃபானி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது மணிக்கு 175 கி.மீ. முதல் 200 கி.மீ. வரை காற்று வீசியது. இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். 160 பேர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடுமையான புயல் காரணமாக ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்துப் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ''24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 3.2 லட்சம் பேர், பூரியைச் சேர்ந்தவர்கள் 1.3 லட்சம் பேர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்காக 9,000 புகலிடங்கள் உருவாக்கப்பட்டன. 7,000 சமையலறைகள் அமைக்கப்பட்டன.
இவை அனைத்தையும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னலமற்ற தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக இழப்புகளும் சேதாரங்களும் குறைந்தன. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, ஒற்றை இலக்கங்களிலேயே உயிரிழந்தோரின் எண்ணிக்கை உள்ளது'' என்றார் நவீன் பட்நாயக்.