

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்திய தேர்தல் முடிவடைந்த நிலையில் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாலத்தீவு மக்களும் அரசாங்கமும் பிரதமர் மோடியுடனும் பாஜக தலைமையிலான ஆட்சியுடனும் நெருங்கிய உறவைத் தொடர்வார்கள் என நான் நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மோடி மாலத்தீவு சென்றிருந்தார்.
வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறவுள்ள நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்தே பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து கணிப்பு முடிவுகள்..
டைம்ஸ் நவ் பாஜக 306 இடங்களைப் பிடிக்கும் என்றும், ரிபப்ளிக் சிவோட்டர் பாஜக கூட்டணி 287 இடங்களைப் பிடிக்கும், நியூஸ் 18 பாஜக கூட்டணி 336 இடங்களைப் பிடிக்கும் என்றும், நியூஸ் நேஷன் பாஜக 290 இடங்களைக் கைப்பற்றும் என்றும், நியூஸ் எக்ஸ் பாஜக கூட்டணி 242 இயங்களைக் கைப்பற்றும் என்று கணிப்புகளை வெளியிட்டுள்ளன.