

பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை குற்றமற்றவர் என்று கூறிய கருத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறும்போது, “ஹபீஸ் சயீத் பற்றிய எங்களது நோக்கு மிகத் தெளிவானது. மும்பைத் தாக்குதலின் பின்னணியில் தீமையின் மூளையாகச் செயல்பட்டவர் ஹபீஸ், மும்பைத் தெருக்களில் கொலைகள் செய்ததன் பின்னணியில் உள்ள குற்றவாளி.
நாங்கள் பாகிஸ்தானிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம், ஹபீஸை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று. 26/11 தாக்குதலுக்காக அவர் இன்னமும் கைது கூட செய்யப்படவில்லை.
ஆகவே அவர் சுதந்திரமாகத் திரிவதற்குக் காரணம் அவர் பாகிஸ்தான் நாட்டுக் குடிமகன் என்பதே” என்று சாடியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறுகையில், “ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் குடிமகன் அவர் அதனால் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்வார். என்ன பிரச்சினை? அவர் பாகிஸ்தான் குடிமகன், ஆகவே பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அவர் மீது எந்த வித சிக்கலும் இல்லை. அவருக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை” என்று கூறியிருந்தார்.
அதற்குப் பதிலடி கொடுத்த வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், “இந்த வழக்கு தொடர்பாக 99% சாட்சியங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது. ஏனெனில் அனைத்து சதிகளும் பாகிஸ்தானில் தீட்டப்பட்டதே. இந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டது பாகிஸ்தானில்.
இந்தச் செயலுக்கான நிதி ஆதாரங்கள் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டது, இதில் தொடர்புடைய அனைவரும் பாகிஸ்தானியர்கள், ஆகவே பாகிஸ்தானுக்கு ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க பொறுப்பு இருக்கிறது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு”என்றார்.