இந்தியர்களால் முடியாதது எதுவும் இல்லை: மங்கள்யான் வெற்றியை முன்வைத்து மோடி பெருமிதம்

இந்தியர்களால் முடியாதது எதுவும் இல்லை: மங்கள்யான் வெற்றியை முன்வைத்து மோடி பெருமிதம்
Updated on
1 min read

செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உணர்ச்சி பொங்கப் பாராட்டினார்.

‘இந்தியர்களால் முடியாதது என்று எதுவும் கிடையாது’ என அவர் பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் மங்கள்யான் வெற்றி குறித்த செய்திகள் வெளியான சில மணி துளிகளில் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று வரலாறு படைக்கப்பட் டுள்ளது.கற்பனையிலும் நினைக்க முடியாத விஷயத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண் முன்னால் செய்து காட்டி, இந்தியாவின் திறமையை நிரூபித்துள்ளனர். முடியவே முடியாது என்பதையும் முடித்துக்காட்டுவோம் என்பதை நிரூபித்துள்ளோம். எல்லைகளைக் கடந்து, உலகத்துக்கே சவால் விடும் வகையில் சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரோ விஞ்ஞானிகளால் நானும், சக இந்தியர்களும் கர்வம் கொள்கிறோம். இனி நம‌க்கு எல்லையே இல்லை. நமது முன்னோர்கள் கண்ட கனவு நனவாகியுள்ளது.இந்த வெற்றி விண்வெளி ஆராய்ச்சித்துறையில் எதிர்கால சந்ததியினருக்கு வழி காட்டும். இந்த பொன்னான தருணத் தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.

முதலில் நமக்கு எதிராக எழுந்த அவநம்பிக்கைகள் காணாமல் போய் உள்ளன. இதுவரை 51 முறை செவ்வாய்கிரகத்துக்கு விண் கலத்தை ஏவும் முயற்சிகள் நடை பெற்றுள்ளன. மிகக் குறுகிய கால மான‌ 3 ஆண்டுகளில் மங்கள்யான் திட்டத்தை வெற்றிபெறச் செய்து, சாதனை படைத்துள்ளோம். ஒரு ஹாலிவுட் படத்துக்கான தயாரிப்புச் செலவை விட, மிகக் குறைவான செலவில் இந்த வெற்றியை நிகழ்த்தி இருக்கிறோம். இதன் மூலம் ந‌ம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் மிகவும் தெளிவானவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.

மங்கள்யான் வெற்றியின் மூலம் முதல் முயற்சியிலே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வுக்கலத்தை வெற்றிகரமாக இணைத்த ஒரே நாடு இந்தியாதான் என பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ளலாம். செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்து வதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் சரியான உணவு, தூக்கம் ஆகிய வற்றை தியாகம் செய்துள்ளனர் என்பதை மறக்கக் கூடாது. விஞ் ஞானிகளின் மகத்தான சாதனையை பள்ளி,கல்லூரி மாண வர்கள் கைதட்டி கவுரவிக்க வேண்டும். பூஜ்ஜியத்தை இந்தியர் கள்தான் கண்டுபிடித்தோம். அது உலகுக்கு மிகப்பெரிய கொடை யாக விளங்குவதைப் போல மங்கள்யானும் விளங்கும்.

நமது (சுருக்கமாக) ‘மாம்’ - (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) செவ்வாய் கிரகத்தை நேரில் சந்தித்துள்ளது.ஒரு போதும் மாம் (அம்மா) நம்மை ஏமாற்றாது.இந்திய அணி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் நாடே உற்சாக‌ கொண்டாடுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றி அதனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இந்தியர்கள் அனைவருமே கொண்டாட வேண்டிய தருணம் இது''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in