Last Updated : 24 May, 2019 12:00 AM

 

Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி; ஒரே இடத்தை வென்று காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி

மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் 25 தொகுதிகளில் வென்று பாஜக வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. காங்கிரஸும், மஜதவும் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக தனித்தும், காங்கிரஸ் – மஜத கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், மஜத 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்தது.

துமக்கூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா (மஜத), மண்டியாவில் குமாரசாமியின் மகன் நிகில் (மஜத), ஹாசனில் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் (மஜத), குல்பர்காவில் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே (காங்), சிக்கப்பள்ளாப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி (காங்), பெங்களூரு வடக்கில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா (பாஜக), உடுப்பியில் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே (பாஜக), பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரஸ், மஜத வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். கர்நாடகாவில் இரு பெரும் கட்சிகளாக இருந்த காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்ததால் தொடக்கத்தில் பாஜகவுக்கு கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் அந்த கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பங்களாலும், காங்கிரஸில் நிலவிய உட்கட்சி பூசலாலும் சூழல் பாஜகவுக்கு சாதகமாக மாறியது.

இரு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கின. ஆரம்பம் முதலே 28 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்தது. முதல் 5 சுற்றுகளில் பெங்களூரு மத்திய தொகுதி, சாம்ராஜ்நகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸுக்கு முன்னிலை கிடைத்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா அம்பரீஷுக்கும், குமாரசாமியின் மகன் நிகிலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சுமலதா வென்றார்.

ஹாசனில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவும், பெங்களூரு ஊரக தொகுதியில் டி.கே.சுரேஷும் முன்னிலை வகித்தனர். அதே வேளையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா, நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் பின் தங்கினர்.

தேவகவுடா தோல்வி

நேற்று மாலை 8 மணி நிலவரப்படி பாஜக 25 தொகுதிகளில் வெற்றி கோட்டை நெருங்கியுள்ளது. பாஜக வேட்பாளர்கள் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த் குமார் ஹெக்டே, முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா, நிகில் குமாரசாமி, பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் - மஜத தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் 142123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடக காங்கிரஸ் வரலாற்றில் 1996-ல் அக்கட்சி 5 இடங்களை மட்டுமே வென்றது. தற்போது அதற்கும் குறைவாக ஒரே ஓர் இடத்தில் வென்று, வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் - மஜத கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளதால், கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள இந்த கூட்டணியின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது குறித்து விவாதிக்க முதல்வர் குமாரசாமி இன்று அவசர அமைச்சரவை, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x