

17-வது மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 6-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதிவரை நடந்தது. 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்து, மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மோடி, 2-வது முறை பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கின்றனர்.
அந்த நிகழ்ச்சிக்குப்பின், 31-ம் தேதி புதிய மத்திய அமைச்சரவை கூடுகிறது. அப்போது, நாடாளுமன்றத்தின் முதல் அமர்வை நடத்துவது குறித்து இறுதியாக முடிவு செய்யப்படும்.
இந்த கூட்டத்தில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பெரும்பான்மையை இந்த கூட்டத்தில் நிரூபிக்கும். அதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்வு உள்ளிட்டவே நடக்கும். இந்த கூட்டத் தொடர் ஜூன் 6-ம் தேதி தொடங்கி 15-ம் தேதிவரை 6 அமர்வுகளாக நடத்தப்படலாம் என டெல்லிவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.