Last Updated : 27 May, 2019 11:53 AM

 

Published : 27 May 2019 11:53 AM
Last Updated : 27 May 2019 11:53 AM

குல்லாவை நீக்கச் சொல்லி முஸ்லிம் இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: கவுதம் கம்பீர் கண்டனம்

ஹரியானா மாநிலம், குருகிராமில் குல்லா அணிந்திருந்த முஸ்லிம் இளைஞரை குல்லாவை நீக்கக் கோரி அடையாளம் தெரியாத சிலர் அடித்து உதைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு டெல்லிகிழக்கு பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது பர்கர் ஆலம்(வயது25). இவர் குர்கிராமில் உள்ள ஜேக்கப் புரா பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள சர்தார் பஜாரில் தையற்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென அடையாளம் தெரியாத 4 பேர் ஆலம் கடைக்குள் புகுந்து, தலையில் அணிந்திருந்த குல்லாவை கழற்ற வலியுறுத்தினார்கள்.

அதற்கு ஆலம் மறுக்கவே அவரை அடித்து உதைத்த அந்த கும்பல், அவரை பாரத்மாத்தா கிஜே என்று வாசகத்தையும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தையும் கூற கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு ஆலம் மறுக்கவே அவரை அடித்து உதைத்து அந்த கும்பல் தப்பிவிட்டது.

இதுகுறித்து போலீஸில் முகமது ஆலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், " கடையில் அமர்ந்திருந்த என்னிடம் 4 பேர் கொண்ட கும்பல் வந்து, நான் அணிந்திருந்த குல்லாவை அகற்றுமாறு கூறினர். இந்தப் பகுதியில் இதுபோன்று குல்லா அணியக் கூடாது என்று மிரட்டினர். அதற்கு நான் மறுக்கவே அவர்கள் வலுக்கட்டாயமாக என் தலையில் இருந்த குல்லாவை நீக்கி என் கன்னத்தில் அறைந்தனர்.

என்னை பாரத் மாத்தா கி ஜெய் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்றும் உச்சரிக்கக் கூறினர். அதற்கு நான் மறுக்கவே என்னை இரக்கமின்றி அடித்து, காலால் உதைத்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல் தாக்குதல் நடத்தும்போது, ஆலம் எழுப்பிய சத்தம் கேட்டு, அப்பகுதி மசூதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்ததும், தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓடினர்.

இதுகுறித்து குருகிராம் போலீஸ் துணை ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், " ஆலம் அளித்த புகாரைப் பெற்றுள்ளோம். முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 153, 147, 149, 323,506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம், விரைவில் அந்த நபர்களை கைது செய்வோம் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே முஸ்லிம் இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு டெல்லி கிழக்குத் தொகுதி பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் விடுத்த செய்தியில்," குருகிராமில் முஸ்லிம் இளைஞர் தலையில் அணிந்திருந்த குல்லாவை நீக்கக் கோரியும், ஜெய் ஸ்ரீராம் உச்சரிக்கச் சொல்லியும் சிலர் நடத்திய தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க குருகிராம் அதிகாரிகள் முன்வர வேண்டும். நாம் மதச்சார்பற்ற நாட்டில் வசிக்கிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x